Friday 15 January 2016

கல்விக்குள் மூக்குநுழைக்கும் அரசியலதிகாரம்!!!


கல்வி, விளையாட்டு,  போன்ற துறைகள் திறமையால் கட்டியெழுப்பப்படுவது! அங்கே தனித்துவமானதும் சமநிலையானதுமான ஆளுமையுள்ள மாணவர்கள், வீரர்கள் பரீட்சிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அதற்கு சுயமாக இயங்கும் அதிபரும், ஆசிரியர்களும், நடுவர்களும் காணப்படவேண்டும். அப்போதுதான் ஒரு சமநிலை ஆளுமையுள்ள சமூகத்தை நாம் கட்டியெழுப்பமுடியும்! 

இன்று எமது ஊரைப்பொருத்தளவில் ஒவ்வொரு பாடசாலையின் அதிபரும், ஆசிரியர்களும், தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக விரும்பியோ விரும்பாமலோ ஏதோ ஒரு அரசியல் பின்புலத்தில்தான் தங்கியிருக்கவேண்டியிருக்கிறது. சுயமாக இயங்க உரிமைகள் இருந்தும் அரசியலதிகாரம் இவர்களது உரிமைகளைத் தட்டிக் கழிக்கிறது. ஓர் அதிபர், அல்லது ஆசிரியர் பக்கச்சார்பின்றி சுயமாக இயங்குகின்றபோது அரசிலதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சில வால்களின் சுயநலத் தேவைகளுக்கு அவர் இடைஞ்சலாக இருந்தால் அவரை ஒவ்வொரு பிரதேசமாக மாற்றி மாற்றி தமது பழிவாங்குதலைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

அதுமட்டுமல்ல, உயரதிகாரிகளிடம் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல் பின்புலமில்லாமல் அனைத்து ஆவணங்களுடன் சென்றாலும் அரசியலதிகாரம் எனும் ஆவணக்குறைவால் நிராகரிக்கப்படுகின்றனர். இவ்வாறு அனைத்திலுமே அரசியல் வியாபித்திருப்பதால் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டு, திறமைகளும், முயற்சிகளும் மழுங்கடிக்கப்பட்டு அநாதைகளாக்கப்படுகின்றனர். 

அரசியலதிகாரத்தை தூக்கிவீசும் அதிகாரிகள் இலங்கை முழுவதும் தூக்கிவீசப்பட்டு பந்தாடப்படுகின்றனர். அவர்களது கனவுகளும் கற்பனைகளும் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறன.... இதனால் பாதிக்கப்படுவது அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்ல! ஒரு சமூகமே பாழாய்ப்போய் விடுகிறது...  இத்துறைகளில் அரசியல் நுழைவதால் மாணவர்களுக்கு வன்முறை கற்பிக்கப்படுகிறது. சிலர் மாணவர்களை தமது தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தவும் செய்கிறார்கள். பின்னர் எவ்வாறு நல்ல அறிவு, திறன், மனப்பாங்குள்ள நடத்தையில் சிறந்த மாற்றங்களைக் கொண்ட எதிர்காலச் சமூகத்தை நாம் எதிர்பார்ப்பது!!?? 

பாடசாலைகளில் வெண்மைநிற ஆடைகள் பேணப்படுவதற்குக் காரணம் ஏழை, பணக்காரன், அநாதை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எல்லா வேறுபாடுகளையும் மறந்து அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதற்காவே! ஆனால் இன்று என்ன நடக்கிறது??? அதிபரோ, ஆசிரியரோ மாணவர்களுக்குப் புத்திமதியோ, வழிகாட்டல்களோ, ஒழுக்கமோ சொல்லமுடியாதவாறு மாணவர்களால் அடக்கியாளப்படுகின்றனர்!! அதற்கு முழுக்காரணம் அம் மாணவன்/மாணவியின் அரசியல் பின்புலம்தான்!!! அரசியலதிகாரம் படைத்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களால் அதிகாரிகளும் சேவையாளர்களும் துன்புறுத்தப்படும்போது அவர்களால் எவ்வாறு சிறந்த சமூகத்தை உருவாக்கமுடியும்!!?? இச்செயற்பாடு தானே தனது தலையில் மண்ணை வாரிக்கொட்டுவது போன்றது.
எப்போது கல்வி, விளையாட்டு, வைத்தியம் போன்ற துறைகளில் அதிகாரிகளும், சேவையாளர்களும் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு சுயமாக இயங்கி திறமைகளுக்கு மட்டும் முதலிடம் கிடைகின்ற காலம் வருமோ அன்றுதான் எமது அட்டாளைச்சேனைக் கிராமத்தில் உண்மையான விடிவு ஏற்படும். 

ஏழைகளும், அநாதைகளும் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்களும், அரசியலதிகாரம் படைத்தவர்களும் உயர்த்தப்படுகின்ற ஆண்டான் அடிமைச்சமூகம் இருக்கின்ற காலமெல்லாம் வன்முறையற்ற நல்ல சமூகத்தைக் காணமுடியாது.
எனவே, நல்லவற்றை சிந்தித்திப்போர் சிலரின் செயற்பாடுகள் சிறிய விதைபோல இருந்தாலும் அதன் பிரதிபலன் நாளைய எமது சமூகத்தின் விடியலில் விருட்ஷமாக நிழல் கொடுக்கும். அன்றுதான் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கமுடியும்!

-நன்றி-


0 comments:

Post a Comment