Tuesday 19 January 2016

அரசியலும் சமூக அவலங்களும்




எமது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னர் ஒரு காலம் இருந்தது..... 
1995ற்கு முன்னர் பிறந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் (அதாவது சுமார் 20 வருடங்களுக்கு முன்னர்.) அன்று போட்டிகளில்லை, பொறாமைகள் இல்லை, குரோத மனப்பான்மை இல்லை, வஞ்சகமில்லை. வரட்டுக் கௌரவமில்லை. மக்களிடையே அன்னியோன்னிமான வாழ்வு இருந்தது, அண்டை வீட்டார்கள் பசித்திருக்க ஏனையோர் புசிக்கமாட்டார்கள்,  ஒருவர் வீட்டில் சமைக்கின்ற “கறி” ஏனைய குடும்பங்களுக்கும் பரிமாறப்படும். குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து சொந்தங்களோடு இணைந்திருக்கும், அன்பில் பாசப்பிணைப்பு இருந்தது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். இவ்வாறு அன்றைய வாழ்வு மனதுக்கு இதமான சந்தோசத்தையும், அமைதியையும் தந்தது. அதனால் அன்றைய மக்கள் தங்களிடையே பதற்றமின்றி(Tension) சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து சந்தோசமாக இருந்தனர். அன்றும் அரசியல் இருந்ததுதான்.............

ஆனால் இன்று  எமது மக்களிடையே பல்வேறுபட்ட சுயநலக்காரணங்களுக்காக தமது உறவுகளைப் பகைத்துக்கொண்டு வாழ்கிறோம். அதிலும் குறிப்பாக அரசியலால் பிரிந்தவர்களே அதிகம்! குறிப்பிட்ட காலம் மட்டுமே மாறி மாறி வருகின்ற அரசியலுக்காக நமது உறவுகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்வதா?? ஆட்சியும், அதிகாரமும் இன்றிருக்கும் நாளை இன்னொருவனின் கையில். அதற்காக நாம் வாழ்நாள் முழுதும் அடிமைகளாக வாழ்வதா??

நாம் ஒவ்வொருவரும் கட்சி கட்சியாகப் பிரிந்துகொண்டும், கட்சிகளுக்குள்ளேயே பிரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் தூற்றியும், தங்களின் உறவுகளை தாங்களே இழிவுபடுத்திக்கொண்டும், போட்டியென்ற பெயரில் பெறாமைகளை நெஞ்சிலே சுமந்துகொண்டு வஞ்சகப்புகழ்ச்சிகளை நாவிலே வழியவிட்டு வாழ்வதும், தங்களுக்குள்ளே சிறு சிறு குழுக்களை அமைத்துக்கொண்டு ஏனைய சகோதரனுக்கு எதிராக ஏவிவிடுவதும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் மூழ்கிக் கிடப்பதும்தான் இன்றைய அரசியலா???

வெளிநாட்டு அரசியலைச் சிந்தித்துப் பாருங்கள். அங்கே ஒரே மேடையில் எதிர்க்கட்சிகள் தமது பிரச்சாரங்களில் ஈடுபடுவர். (உதாரணத்திற்கு அமேரிக்கா, ரஷ்யா, போன்ற மேற்கத்தேய நாடுகள்) அவரவர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைக் வெளியிடுவர், எவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் விரும்புகின்றார்களோ அவர் வெற்றிபெறுவார் சிறந்த ஆட்சியும் அமையும்.

ஆனால் எமது ஊரிலே அரசியல் பிரச்சாரங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வன்முறைகளும், ஒருவரை இன்னொருவர் ஏசித் தீர்ப்பதும், மற்றவருக்கெதிரான வஞ்சகச் சூழ்ச்சிகளை அமைத்தலும், வெற்றிபெற்றவர், ஏனைய தோல்வியுற்றவர்களின் வீடுகளை-சொத்துக்களை சேதப்படுத்துவதும், நண்பர்கள் சகோதரர்களை பழிவாங்குவதும் இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள குண்டர்களை உருவாக்கி ஏனையோர் சட்டத்திலிருந்து நழுவி விடுகின்றனர். ஆனால்அப்பாவி குண்டர்கள் சட்டத்திரைக்குள் அப்படியே அடைபட்டு அவர்களுடைய வாழ்வை முடக்கிக்கொள்கின்றனர்.

சிந்திக்கும் ஆற்றலும், நல்லொழுக்கமும், சிறந்த அறிவுமுடைய மக்களாகிய நாம் அரசியலில் சிந்திக்கவேண்டும்! தம்மை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி குளிர்காயும் சுயநலவாதிகளின் வஞ்சத்தன்மைக்கு ஒருபோதும் ஆளாகி, அடிபணிந்து தம்மைத்தாமே அழித்துக்கொள்ளக்கூடாது. சுடலைஞானம்போல் அவ்வப்போது வருகின்ற தேர்தல் வாக்குறுதிகளால் அடிமையாகிவிடக்கூடாது. இவ்வாறு சிறந்ததை மக்கள் சிந்திப்பதனூடாகவே எமது ஊரில் சேவை செய்யும் உண்மையான அரசியல்வாதிகளை நாமே உருவாக்கமுடியும்! சேவைகளும் அதிகரிக்கும், சமூகமும் செழிக்கும். 
நாம், வன்முறையற்ற அரசியல் உரிமையினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். நடுநிலையாக சிந்திக்கவேண்டும். எமது ஊரைப்பொருத்தளவில், உண்மையான அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டு கொள்ளவேண்டும்! யார் மக்களுக்காக பாடுபடுபவர் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். மக்களின் துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவரை ஒருபோதும் நாம் மறந்துவிடல் கூடாது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வாக்குகளை இடும் உரிமையுண்டு அதனை அவரவர் நல்ல சமூக சிந்தனையுடன் பயன்படுத்தவேண்டும். நமது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கு நாமே வித்திடவேண்டும். நாம் எமது வாக்குரிமைமூலம் இன்று நாட்டுகின்ற நல்ல அரசியல் விதைகள்தான் நாளை எமது தலைமுறையினைக் காத்து நிற்கும் விருட்ஷமாக வளர்ந்து நிழல் கொடுக்கும் என்பதைப் புறிந்துகொள்ளவேண்டும்.

இடையிடையே தமது அரசியல் இலாபத்திற்காக போலியாக தம்மை புகழ்ந்து உறவுகொண்டாடி  அவ்வப்போது வந்துபோகின்ற அரசியல்வாதிகளை நாம் அறிந்துவைத்திருக்கவேண்டும். மக்களாகிய நாம் விழிப்படைந்தால் மட்டுமே சிறந்த அரசியல்வாதிகளை எமதூரில் உருவாக்கமுடியும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டு செயலாற்றவேண்டும்.

எனவே, பொறாமைகள், வன்முறைகள் அற்ற வகையில் தமது உரிமைகளைக்கொண்டு பொருத்தமானவரை தெரிவுசெய்வது எமது சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் நாம் செய்யவேண்டிய கடமை என்பதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

-நன்றி-




0 comments:

Post a Comment