Friday, 29 January 2016

பொதுபலசேனா அமைப்பின் ஆரம்ப “வித்து” எது?


இக்கேள்விக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை தமது அறிவுக்கெட்டியவகையில் பல்வேறு ஊடகங்களினூடாக தினமும் கூறுவதை நாம் அன்றாடம் அவதானிக்கின்றோம். உண்மையில் இலங்கையில் நடப்பது என்ன? பொதுபலசேனாவின் ஆரம்ப வித்து எது? என்ற வினாவுக்கான விடையினைத் தெளிவாக அறிந்துகொள்வதற்காக நாம் தற்காலத்துடன் கடந்த காலத்தையும் இணைக்கவேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைகளின் உருவாக்கத்தின் ஆரம்பமும் அதன் தெளிவும் கிடைக்கும்.

கல்வியும். பொருளாதாரமும் ஒரு நாட்டின் முதுகெலும்பு எனலாம். ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்கு இவையும் முக்கிய காரணிகளாக அமைகிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற எமது இலங்கையைப் பொருத்தளவில் பொருளாதார ரீதியாக முஸ்லீம்களே வளர்ந்து வருவதை அனைவரும் அறிவர்.

பொருளாதாரத்தில் முஸ்லீம்கள் ஓங்கி நிற்பதை சகித்துக்கொள்ளமுடியாத துவேச பேரினவாதிகளால் இலங்கை வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915ல் சிங்கள முஸ்லிம் கலவத்தைக் கூறலாம். இக் கலவரம் 1915 மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தாலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதால் பாதிப்புக்கள் முஸ்லீம்களுக்கே அதிகமாக இருந்தது.

1915 மே 29  இல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர். இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவாரக இருந்த பொன் இராமநாதன், துவேச சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டமையும், அன்றைய ஆங்கிலேய அரசினால் கைதுசெய்யப்பட்ட  டீ. எஸ் சேனானாயக்கா, எப். ஆர் டயஸ் பண்டாரநாயக்காடீ. எஸ் விஜேவர்தனாடொக்டர் நெயிசர் பெரேராஈ. டீ. த சில்வாஎச் அமரசூரியஏ. எச். மொலமூறே பல சிங்களத் தலைவர்களை இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களை மீட்டுவந்தமையையும், அவர் நாடு திரும்பியதும் வண்டியில் பொன் இராமநாதனை வைத்து சிங்கள சகோதரர்கள் தாமாகேவே வண்டியை இழுத்து வீடுவரை கொண்டு சேர்த்தமையையும் நாம் அறிந்தவையே. ஆனால் கடந்த 30வருட ஆயுதப்போராட்டத்திற்கு வித்திட்ட 1983 ஜுலை 23ல் ஏற்பட்ட தமிழ் சிங்கள கலவரத்தையும் எந்தத் தமிழரும் மறந்திருக்கமாட்டர்கள்.


மேலே கூறிய கடந்தகால வரலாற்றை ஒவ்வொருவரும் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அன்றைய இனக்கலவரத்தின் ஆரம்பமே பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமையும், முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டமையுமே என்பது புலனாகும். அன்றைய கலவரத்தின் ஆரம்ப நிலையும், இக்கால பொதுபலசேனாவின் செயற்பாடுகளும் ஒருமித்ததே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். 

2011 மே 05ஆம் திகதி விமலஜோதியின் தலைமையில் புத்த கலாச்சார மையத்தை மஹிந்த ராஜபக்ஷவே திறந்து வைத்தார் உண்மையில் பொதுபலசேனாவின் ஆரம்ப வித்து இதிலிருந்துதான் தூவப்பட்டது என்பதை யாரும் மறந்துவிடலாகாது. 2013, 2014 காலப்பகுதியில் பொதுபலசேனாவின் தலைமையகமும் இந்த புத்தகலாச்சார மையத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்ராவில்தான் இயங்கிவந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்ல 2013 மார்ச் 9 அன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், பொது பல சேனாவின் கலாச்சாரம் மற்றும் பயிற்சி மையமான "மெத் சேவனா" பிலனாவில் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

பொதுபலசேனா எனும் இவ்வமைப்பினை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான நகர்வுகளுக்காகவும், முஸ்லீம்களின் வர்த்தகத்தை முடக்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுத்து தமது அடிமைகளாக அடிபணிய வைப்பதற்காகவும் மக்களிடையே அணையா நெருப்பாக என்றுமே எரிந்துகொண்டிருக்கக்கூடிய இனவாத உணர்வை ஓங்கச் செய்வதே துவேச அரசியல்வாதிகளின் நச்சு எண்ணங்களாகும். அதனால்தான் நோ லிமிட் போன்ற இலங்கை முஸ்லீம்களின் வர்த்தக மையங்களின் மீதான அடாவடித்தனங்களும், பள்ளிகள் உடைப்பு, நோன்புகால கிரீஸ் மனித தோற்றம், ஹபாயாவுக்கான எதிர்ப்பு, ஜும்மாவுக்கான எதிர்ப்புக்கள், ஹலால் உணவுப் பிரச்சினை........ இவ்வாறு முஸ்லீம்களுக்கான பொதுபலசேனாவின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சினை என்பதால் உலக நாடுகள் வழமையைப்போல் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொள்கின்றன.

ஆனால் இன்று எமது சிங்கள சகோதரர்களில் பெரும்பாண்மையினர் இனத்துவேசத்தையும், இனக்கலவரத்தையும் விரும்பாமையாலும், அனைத்து இனங்களுடனும் நல்லுறவைப் பேணவேண்டுமென்ற தூய எண்ணங்களுடனும் சுமூகமான வாழ்வை நோக்கிப் பயணிக்கின்னர். இதற்கு தக்க ஆதாரமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு பாரியதொரி தோல்வியினைக் கண்டதைக் குறிப்பிடலாம்.

எனவே, சில அரசியல்வாதிகள் பொதுபலசேனா எனும் இனத் துவேசக்கட்சியினை உருவாக்கி இனப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு அதனைப் பின்னணியாக வைத்து அரசியல் செய்வதற்கு முனைகின்றனர் என்பதையும், அதற்கு மாற்றுமத சகோதரர்களில் ஒர் சிலரைத்தவிர ஏனையோர் இனத்துவேசத்தை விரும்பவில்லை எனவும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். 



மேலதிக தகவல்களுக்காக

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்



  1. நன்றி

0 comments:

Post a Comment