Sunday, 10 January 2016

இலங்கை வரலாறு பகுதி 3

குடியேற்றக் காலம்

1602ல் டச்சு நாடுகாண்பயணி சோரிசு வான் இசுபில்பேர்சன் விமலதர்மசூரியனைச் சந்திப்பதை விவரிக்கும் 17ம் நூற்றாண்டு ஓவியம்.
இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505ல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர். போர்த்துக்கீசருடனான பல தசாப்த கால போரையடுத்து 1592ல், முதலாம் விமலதர்மசூரியன் தனது அரசை உள்நாட்டு நகரான கண்டிக்கு மாற்றினான். கண்டி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கச் சிறந்த இடம் என அவன் கருதினான். 1619ல், போர்த்துக்கீசரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது யாழ்ப்பாண அரசு அடிபணிந்தது.
Shield shape with an elephant center and four palm trees on each side
பிரித்தானிய இலங்கையின் இலச்சினை.
இரண்டாம் ராசசிங்கனின் ஆட்சியின் போது டச்சு நாடுகாண் பயணிகள் இலங்கை வந்தனர். 1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது.இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான"உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796ல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்.) கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான்.ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது.
கம்பளைக்கு அருகிலுள்ள மரியாவத்த தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் அதன் உரிமையாளர் ரிக்சாவில் காணப்படுகிறார்., சுமார்.1895
தேயிலைத்தொழிற்சாலையின் உட்புறத் தோற்றம், சுமார் 1895. இலங்கையில் தேயிலை உற்பத்தி 1867ல் பிரித்தானியரான சேம்சு டெயிலரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் நவீனகாலம், 1833ல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869ல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது.
19ம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது. (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே.) இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50%மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944-45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

விடுதலைக்குப் பின்

சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட இனமுறுகல் நிலையைத் தணிக்கும் முகமாக பண்டாரநாயக்க, தமிழரசுக் கட்சியின் தலைவர் S. J. V. செல்வநாயகம் அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை (பண்டா-செல்வா ஒப்பந்தம்) ஏற்படுத்திக் கொண்டார்.[97]எவ்வாறாயினும், இவ்வொப்பந்தத்துக்கு எதிராக பௌத்த பிக்குகளாலும், எதிர்க்கட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அரசின் குடியேற்றத் திட்டங்கள் சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களிடையே கசப்புணர்வு வளரக் காரணமானது. 1959ல் கடும்போக்கு பௌத்த பிக்கு ஒருவனால் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.
சுதந்திர சதுக்கத்தில் முதற் பாராளுமன்றத்தின் திறப்பு விழா, சுயாட்சி ஆரம்பத்தைக் குறித்து நிற்கும் நிகழ்வு.
1960ல் S. W. R. D. பண்டாரநாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்றார். 1962ல் ஏற்பட்ட கலகத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். இவரது இரண்டாம் பதவிக்காலத்தின்போது அரசு சமவுடமைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்திய அதேவேளை அணிசேராக் கொள்கையையும் கடைப்பிடித்தது. 1971ல், இலங்கையில் மாக்சியப் புரட்சி ஏற்பட்டது. எனினும், இது உடனடியாக அடக்கப்பட்டது. 1972ல் மேலாட்சி நிலை ஒழிக்கப்பட்டு நாடு குடியரசானது. நாட்டின் பெயரும் சிறீ லங்கா என மாற்றப்பட்டது. சிறுபான்மையினருக்கெதிரான அடக்குமுறைகளும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களால் தூண்டப்பட்ட இன உணர்ச்சியும் 1970களில் வட பகுதியில் தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழிகோலின. நாட்டின் பின்தங்கிய பிரதேசத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கும் முகமாக சிறிமாவோ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையினால், பல்கலைக்கழகங்களில் திறமைவாய்ந்த தமிழ் மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டது. இது தமிழ் ஆயுதப் போராட்டத்துக்கு உடனடிக் காரணியாக அமைந்தது. 1975ல் நிகழ்ந்த யாழ்ப்பாண நகரமுதல்வர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலை திருப்புமுனை வாய்ந்ததாக அமைந்தது.
1977ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடித்து J. R. செயவர்த்தன அரசு பதவிக்கு வந்தது. செயவர்த்தன புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியதோடு, திறந்த பொருளாதாரம் மற்றும் பிரான்சு அரசுப் பாணியிலான நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறையையும் உருவாக்கினார். இதன்மூலம் தெற்காசியாவிலேயே பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய முதல் நாடாக இலங்கை தடம்பதித்தது. 1983ன் ஆரம்பத்தில், இன முறுகல்களின் விளைவால் இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். 1983 யூலை இன ஒடுக்குமுறைகளால் 150,000க்கும் அதிகமான தமிழ்மக்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தவறான வெளிநாட்டுக் கொள்கைகளின் காரணமாக விடுதலைப் புலிகள் ஆயுதம் மற்றும் பயிற்சிபெற்ற இயக்கமாக வளர்ச்சி கண்டது. 1987ல், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதே ஆண்டில், மக்கள் விடுதலை முன்னணி தென்னிலங்கையில் தனது இரன்டாவது போராட்டத்தை தொடங்கியது. இதன் விளைவால் 1990ல் இந்திய அமைதி காக்கும் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். 2002ல், இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நோர்வேயின் தலைமையில் சமாதான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.
2004ல் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டது. 1985 இலிருந்து 2006 வரை, இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனராயினும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. 2006ல் விடுதலைப் புலிகளும் அரசும் மீண்டும் மோதல்களில் ஈடுபட்டனர். இலங்கை அரசு 2008ல் உத்தியோகபூர்வமாக சமாதான ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்டது. 2009ல், மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து இலங்கை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. 26 வருடகால இனமுறுகலில் 60,000 இலிருந்து 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஐநா செயலாளர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கையின்படி 40,000 தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளதுடன் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் இலங்கையின் பெரிய தமிழ் அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு கூட்டாட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சுமார் 294,000 மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.மீள்குடியேற்ற அமைச்சின் தகவலின் படி, பெரும்பாலான அகதிகள் தமது இருப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 2011 அளவில் 6,651 பேர் முகாம்களில் வசிக்கின்றனர். மே 2010ல், சனாதிபதி மகிந்த ராசபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து 2002 சமாதான உடன்படிக்கை மற்றும் 2009 விடுதலைப் புலிகளின் தோல்வி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆராய முற்பட்டுள்ளார். இலங்கை 26 வருடகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு உலகில் மிகவும் விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தொடரும்.......

0 comments:

Post a Comment