Sunday 10 January 2016

இலங்கை வரலாறு பகுதி 6

தாவரங்களும் விலங்குகளும்

அறியப்பட்ட ஆசிய யானையின் மூன்று உப இனங்களில் இலங்கை யானையும் ஒன்றாகும். 2011 கணக்கெடுப்பில் 5879 யானைகள் காணப்பட்டன.
இந்தோமாலய சூழற்தொகுதியினுள் அடங்கும் இலங்கை உலகின் உயிர்ப்பல்வகைமை மிகுந்த 25 இடங்களில் ஒன்றாகும். நாட்டின் பரப்பளவு மிகச் சிறியதாக இருந்தாலும் ஆசியாவிலேயே உயிர்ப்பல்வகைமை அடர்த்தி கூடிய இடமாகக் காணப்படுகிறது. இலங்கையின் தாவர மற்றும் விலங்குப் பல்வகைமையை எடுத்து நோக்குகையில், குறிப்பிடத்தக்க அளவில் அதாவது 3210 பூக்குந் தாவரங்களில் 27%மானவையும், பாலூட்டிகளில் 22%மானவையும், அருகி வரும் இனங்களாகக் காணப்படுகின்றன. இலங்கை 24 வனவிலங்கு சரணாலயங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இச்சரணாலயங்கள் ஆசிய யானைகள், சிறுத்தைகள், இலங்கைக்கேயுரிய சிறிய தேவாங்கு, மான் வகைகள், ஊதா முக மந்தி, அருகிவரும் இனமான காட்டுப் பன்றி, முள்ளம்பன்றிகள் மற்றும் இந்திய எறும்பு தின்னி போன்ற பல்வேறு உள்நாட்டு விலங்கினங்களின் புகலிடங்களாக விளங்குகின்றன.
பூக்கும் கருவேல மரங்கள் வரண்ட யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் காணப்படுகின்றன. வரள்நிலக் காடுகளில் முதிரை, கருங்காலி, நாகமரம், மகோகனி மற்றும் தேக்கு போன்ற பெறுமதி வாய்ந்த மரங்களும் காணப்படுகின்றன. நாட்டின் ஈரவலயத்தில் அயனமண்டல என்றும் பசுமையான மழைக்காடுகள் காணப்படுகின்றன. இங்கு உயர்ந்த மரங்கள், அகன்ற இலையுடைய மரங்கள் மற்றும் அடர்ந்த கொடி வகைகள் போன்றன வளர்கின்றன. அயன அயல் மண்டல என்றும் பசுமையான காடுகள் மிதவெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளன. இவை உயர்நிலங்களில் காணப்படுகின்றன.
இலங்கைக்கேயுரித்தான இலங்கைச் சிறுத்தை சிறுத்தையினங்களில் அருகிவரும் ஓர் இனமாகும்.
தென்கிழக்கிலுள்ள யால தேசிய பூங்கா யானை, மான் மற்றும் மயில் ஆகியவற்றின் புகலிடமாக உள்ளது. மிகப்பெரிய தேசியப் பூங்காவான வடமேற்கிலுள்ள வில்பத்து தேசிய பூங்கா கொக்குகள், கூழைக்கடாக்கள், அரிவாள் மூக்கன் மற்றும் துடுப்பு வாயன் போன்ற நீர்ப்பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இலங்கையில் நான்கு உயிரியல் காடுகள் உள்ளன. அவை: புந்தல, உருலு, கன்னெலிய-தெடியகல-நகியடெதெனிய மற்றும் சிங்கராச காடுகளாகும். இவற்றுள் சிங்கராசக் காடு இலங்கை நீலச் செவ்வலகன் மற்றும் செம்முகப் பூங்குயில் போன்ற 26 அருகிவரும் பறவைகள் மற்றும் 20 மழைக்காட்டு விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது.
இலங்கையின் மத்திய உயர்நிலங்களில் காணப்படும் அரியவகைப் பூவான மகா ரத் மல.
சிங்கராச காட்டின் தாவரப் பல்வகைமை மிகவும் உயர்வாக உள்ளது. இங்கு காணப்படும் 211 மரங்கள் மற்றும் படர்கொடிகளில் 139 (66%) அருகிவரும் இனங்களாகும். மரங்கள், புதர்கள், மூலிகைச் செடிகள் என்பவற்றை உள்ளடக்கிய இதன் தாவரவியல் அடர்த்தி எக்டேயருக்கு 240,000 தாவரங்களாகும். மின்னேரிய பூங்கா மின்னேரிய குளத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இக்குளம் மீன்னேரியக் காட்டில் வாழும் யானைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கிறது. கோடை காலங்களில் (ஆகத்திலிருந்து அக்டோபர் வரை) அருகாமையிலுள்ள ஏனைய நீர்நிலைகள் வற்றிப்போவதால் மின்னேரியக் குளத்துக்கு யானைகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். இப்பூங்கா அயன மண்டல மழைக் காடுகள், மூங்கில் காடுகள், மலைப் புல்நிலங்கள் (பத்தன) மற்றும் புல்நிலங்கள் (தலாவ) போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
இலங்கை 250 பறவைகளின் தாயகமாக உள்ளது. இது குமண உள்ளிட்ட பல இடங்களைப் பறவைகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. 1970கள் மற்றூம் 1980களில் இலங்கையின் வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்போது, அரசாங்கம் 1,900 km2 (730 sq mi) மொத்தப் பரப்பளவு கொண்ட நான்கு இடங்களை தேசியப் பூங்காக்களாக உருவாக்கியது. எவ்வாறாயினும் 1920ல் 49%மாக இருந்த நாட்டின் காட்டு நிலப்பரப்பு 2009ல் சுமார் 24%மாகக் குறைந்தது.

பொருளாதாரம்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பொருளாதாரம்
புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா,தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தக பயிர்களுக்குப் பெயர்பெற்று விளங்கியது. இலங்கைக்கு 1948யில் சுதந்திரம் கிடைத்த பின்னர்,முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆரம்பத்தில் சிறிது காலமே பின்பற்றியபோதிலும் அது ஆசியாவிலே மிகமுன்னேற்றகரமான பற்பல சமூகநலநடவடிக்கையையும் மேற்கொண்டது.
ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதிசார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அதி இயங்குநிலையில் உள்ள துறைகளாவன, உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, உணவும், குடிவகைகளும்,தொலைத் தொடர்பு, காப்புறுதி மற்றும் வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் ஏற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%). அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997–2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. கொழும்பு பங்கு பரிவர்த்தனை 2003ல் ஆசியாவிலேயே அதி கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது, தென்னாசியாவில் உள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

தொடரும்....

0 comments:

Post a Comment