Tuesday 13 September 2016

முகமூடி அரசியலும் சுதந்திர பேச்சுக்களும்


கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அவர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு அதனுள் பன்றி இறைச்சி வீசப்பட்டு ஹபாயாக்கள் கேவலப்படுத்தப்பட்டு முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் தீயிடப்பட்டு அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு  நோன்புகாலங்களின் இறை வணக்கங்களை மேற்கொள்ளாது தடுக்க ”கிறீஸ் மனிதன்” உருவாக்கப்பட்டு இனத்துவேசத்தை உருவாக்க பொதுபலசேனா உருவாக்கப்பட்டு “சிங்க ளே” எனும் நாமங்கள் உச்சரிக்கப்பட்டு.........இப்படி எத்தையோ அநியாயங்கள் முஸ்லிம்களின்மேல் தினிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது....... எங்கே போய்விட்டது உங்களின் சமூக உணர்வு! சமூக அக்கறை!! சமூக சிந்தனை!!! தன் சமூக சுதந்திரம்!!! மக்களின் எழுச்சி!!!
அவ் ஆளும்கட்சியிலே தனது சமூகத்தைப்பற்றிய அக்கறையின்றி சிலைபோல் வாய்பேசாமல் சுயநலத்திற்காக குந்தியிருந்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பங்கம்விளைவித்த அத்தலைமைத்துவத்தையே மீண்டும் கொண்டுவருவதற்கு இறுதிவரை கடும்முயற்சி செய்துகொண்டிந்தவர்கள் இன்று கிழக்கு முஸ்லிம்களின் எழுச்சிபற்றிப் பேசுவதும் கிழக்கின் சுதந்திரம்பற்றிப் பேசுவதும்தான் வேடிக்கையாக உள்ளது!!

இப்படியாக கடந்த ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் தீவிரமடைகின்றபோது ACMC  மற்றும் SLMC போன்ற மக்கள் நலக் கட்சிகள் அவ்வரசிடமிருந்து சமூகவிடுதலைக்காக பிரிந்தபோதும் இன்னும் சில மக்களின் பிரதிநிதிகள் தன் சமூக விடுதலையைக் கவனியாது சுயநல அரசியலுக்காகவே காத்திருந்ததையும் நாம்  அறியாமலில்லை!!

ஆட்சியும் அதிகாரமும் தம்மிடமிருக்கின்றபோது மக்களின் துயர் துடைக்க முன்வராதவர்கள் இன்று மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து மக்களின் எண்ணங்களை திசைதிருப்ப எத்தனிக்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளைவிட மக்கள் அரசியலில் அதீதி அனுபவம் கொண்டிருப்பதை சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.....

ஆனாலும் அறுந்துவிட்ட பல்லியின் வால்கள் துடிப்பது இயல்பே..... அதுபோல்தான் கடந்த ஆட்சியில் சுயநலத்தில் சுகபோகங்களை அனுபவித்த சிலரின் நிலமைகளும்...... 

மக்களுக்காகவே அரசும் அதன் பிரதிநிதிகளும் எனவே மக்களின் நலனில் ்அக்கறைகொண்ட அரசியல்வாதிகளை நாம் போற்றுகின்றோம். மாற்றமானவர்களை மக்களுக்காக சிந்திக்குமாறு தூண்டுகின்றோம்.

- நன்றி -

Saturday 25 June 2016

அரசியல் நாடகத்தால் பாதிக்கப்படுவது மக்களே!

ஆட்சியும் அதிகாரமும் ஒருவரிடம் நிரந்தரமாக தங்கிவிடுவதில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அதிகாரம் இழந்தபின்னும் சமூகத்தால் போற்றப்படுவர்.... ஆனால் தம்மிடம் ஆட்சியும் அதிகாரமும் இருக்கின்றபோது சமூகத்தைப்புறந்தள்ளி தமது சுயவிருப்பில் இலாபம் காணமுயற்சித்தால் அவர்கள் ஆட்சியதிகாரம் இழந்தபின்னர் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.... இதுவே நியதி.... 

இன்று, தம்மிடம் அதிகாரம் இருக்கின்றபோது சமூகத்தைச் சிந்தியாதவர்கள் எல்லோரும் அவர்களின் அதிகாரம் இழந்தபின்னர் சமூகத்திற்காக குரல் கொடுப்பதாக பம்மாத்துக் காட்டுகின்றனர்.... இதுவே இன்றைய சில நவீன ஆட்சியாளர்களின் இழி நிலையாகும். 

அதிகாரத்தில் இருப்போர் தமது வோட்டு வங்கிகளை நிரப்புவதற்காக ஒரு பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு இருக்கின்றபோதும் அவர்கள் தற்காலிக தீர்வினையே செயற்படுத்திச் செல்கின்றனர். காரணம் அடுத்தடுத்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைதோன்றவேண்டும் தற்காலிக தீர்வுகளையே முன்னெடுக்கவேண்டும் நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தால் எதிர்காலத்தில் தாம் எதைச்சொல்லி வோட்டுக்கேட்பது...... போன்ற  பல்வேறு விடையங்களைச் சிந்திக்கின்றனர்....

இவர்கள் மக்களைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக தமது ஆட்சியையும் அதிகாரத்தையும் எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றனர். இவ்வாறான சம்பவம்தான் எமது கோணாவத்தைக் கிராமத்திலும் தொடர்கிறது.

நான் அறிந்தவகையில், 2004ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த சுனாமிக்கு மறுநாள் ஏற்பட்ட மழையினால் எமது கடற்கரையை அண்டிய கோணாவத்தைக் கிராமத்திலும் வெள்ளம் ஊற்றெடுத்தது. அதன்பின்னர் ஏற்படுகின்ற ஒவ்வொரு மழைக்கும் எமது கிராமத்தில் வெள்ளம் வருவதும் மக்கள் இடம்பெயர்வதும் வீதிகளும் சொத்துக்களும் சேதமாவதும் போன்ற பிரச்சினையே நிகழ்கின்றனர். 

இந்த வெள்ள அனர்த்தம் அதிக பாதிப்போடு வருவதற்கு முக்கிய காரணம் வீதியோரங்களில் வடிகாண்கள் இல்லாமையே. நீர் வடிந்தோடுவதற்கு இடமின்றி வீடுகளுக்குள்ளும் பாதையிலும் நிரந்தரமாகத் தேங்கி விடுகின்றன.  இதனால் சொத்துக்களும் பாதைகளும் சேதமாகின்றன. 
சேதமாகிய பாதைகளை திருத்தவேண்டுமென்று பலநாட்கள் நடையாக நடந்தபின்னர் பாதைகளுக்கு கிரவல் இடப்படும். கிரவல் இட்டு ஓரிரு மாதங்களில் அடுத்த வெள்ளம் வந்துவிடும் பின்னர் இதே சேதம்..... இதே நடை...... இவ்வாறு நிரந்தரமற்ற தீர்வுகளால் ஒவ்வொரு வருடமும் இதே நிலைதான் தொடர்கின்றன.



கடந்த காலத்தில் இந்நிலைபற்றி சிந்தித்து இதற்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டுமென்ற நோக்கோடு எமது கிராமத்தில் அலையோடும் வலையோடும் போராடி கஸ்ட்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கின்ற எமது கிராமத்தின் தலைமகன் முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் முயற்சியினால் தன்னால் முடிந்தவரை ஓரிரு வீதிகளுக்கு வடிகாண்கள் கட்டப்பட்டன. 

அத்தோடு எமது கிராமத்தின் நலன்விரும்பிகள் சிலரினால் வடிகாண் ஒன்றும் (நூலகத்திற்கு முன்னால்) அமைக்கப்பட்டது  முடிந்தவரை முயற்சிசெய்தனர் ஆயினும் முற்றுப்பெறவில்லை. 

எனினும்

இவ்வடிகாண் விடையத்திலாவது எமது அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி மற்றும் கட்சிக்குள்ளே பேதமின்றி ஒன்றுபட்டு சமூகத்திற்குச் செய்யவேண்டிய தொண்டு என்று எண்ணி எதிர்காலத்தில் மக்களுக்கு ஏற்படவிருக்கின்ற வெள்ள அனர்த்தத்தின் சேதங்களை வெகுவாக குறைப்பதற்கான தீர்வாக இவ்வடிகாண்களை செப்பனிட்டு மக்களின் வாழ்வை வளமாக்குதவற்கு செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்....

நன்றியுடன்
-நான்-
வெள்ளம் வருமுன்பே அணை கட்ட வேண்டும்.

Saturday 28 May 2016

கடற்படைச் சிப்பாயை இடம்மாற்றியது முழுமையான தீர்வல்ல!



எமது நாடு மாகாணங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவ்வதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் ஒப்புதலின் அடிப்படையிலேயே பிரையோகிக்கப்படுகின்றன. 

குறிப்பாக, மாகாண முதல்வர் (முதலமைச்சர்)  மக்களினால் தெரிவுசெய்யப்பட்டாலும் அம்முதல்வரின் செயற்பாடுகளுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குகின்ற அதிகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுணருக்கே உள்ளது என்பதுடன் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படுகின்ற ஆளுணரானவர் மக்களின் சேவையில் கவனக்குறைவாக இருந்தாலும் அவருக்கு எந்தப்பாதிப்புமில்லை. மக்களைப்பற்றிய சிந்தனையைவிட ஜனாதிபதிக்கு சேவை செய்வதே இவர்களின் நோக்கமாக இருக்கும். கடந்த ஆட்சியிலும் இதுவே நடந்தது! இது எமது நாட்டு ஜனாநாயகத்தில் உள்ள பெரும் குறையாகும்!

இன்றைய காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர் பதவி என்பது வெறும் பெயரளவில் மாகாணத்தை நிருவகிக்கின்ற ஒரு கௌரவ அமைச்சாகவே காணப்பட்டு வருகின்றது. மாகாண செயற்பாடுகள் அனைத்தும் ஆளுணரின் அதிகாரத்தின் கீழேயே செயற்படுவது மக்களின் இறைமைக்குப் புறம்பான செயலாகும்!  இவ்வாறு மாகாணத்தின் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுணரின் காலடியில் குவிந்துகிடக்கின்றபோது...... எப்பெயர்ப்பட்ட மக்களின் நலனை விரும்புகின்ற சேவைத்திலகமாக இருக்கின்ற முதலமைச்சர்கள் வந்தாலும் தமது சேவைகளை திறண்பட செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது!

இவ்வாறான செயற்பாடுகளின்மூலமே முதலமைச்சரினால் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை காரணமாக முதலமைச்சர் - ஆளுணர் ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு அற்ற தன்மை காணப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மக்களுக்கான அபிவிருத்திகளும், மாகாண செயற்பாடுகளும் தரம் குன்றிக்காணப்படுதவற்கு இதுவே முதன்மைக்காரணமாகும். ஆளுணரின் பொடுபோக்கானதும் மதியாமை எனும் தன்மையினாலுமே கடற்படை சிப்பாயினால் கிழக்கின் முதலமைச்சர் அவமதிக்கப்பட்டதும் - கிழக்கின் முதலமைச்சரினால் கடற்படைச்சிப்பாய் அவமதிக்கப்பட்டதுக்குமான காரணமாகும்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் ஆளுணரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவ்வதிகாரங்கள் முழுமையாக மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகின்றபோதுதான் மாகாணத்தின் சேவைகள் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்பதே யதார்த்தம்!

ஒரு பிரச்சினைக்கான அடிப்படைக்காரணத்தை சரி செய்யாமல் தற்காலிகமாகப் பிரச்சினையின் ஆரம்பத்தை மட்டும் கிள்ளிவிடுவதனால் ஓய்ந்துவிடாது. கடற்படைச் சிப்பாய் இடம் மாற்றப்பட்டது இப்பிரச்சினைக்கான முழுத் தீர்வல்ல! ஆளுணரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு கிழக்கின் முதலமைச்சரிடம் கொடுப்பதே முழுமையான தீர்வாகும்!!

நன்றி





Friday 1 April 2016

ஆளுமையற்ற அதிபரினால் திசைமாறும் அபிவிருத்திகள்.......



“முதல் கோணல் முற்றிலும்கோணல்” என்பார்கள். அதேபோல்தான், ஒரு நிருவாகத்தலைவரின் பொடுபோக்கான தன்மையானது அந்நிறுவனத்தையே பாதிக்கின்றது.

இதற்கும் மேலாக சமூகத்தையே பிரதிபளிக்கின்ற பாடசாலையின் முகாமைத்துவமும் அதன் தலைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் தியாக மனப்பான்மையுடனும் செயற்படுகின்றபோதுதான் அப்பாடசாலையின் வளச்சி மென்மேலும் ஒங்கும் என்பதே யதார்த்தம்!! அவ்வாறின்றி சுயநலத்துடனும், பொறுப்பின்றியும், கவனக்குறைவாகவும் செயற்படுகின்றபோது அங்கே பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமல்ல, அப்பாடசாலையின் முன்னேற்றமும், அபிவிருத்தியும் என்பதுடன் ஒரு சமூகமே பாதிக்கப்படுகின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும்!!

பொறுப்புவாய்ந்த அதிபரினாலேயே ஒரு பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கமுடியும்!

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் அரசின் கொந்தம, லங்கம எனும் திட்டத்தின்கீழ் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றபோதும் அப்பாடசாலையின் ஆளுமையற்ற அதிபரின் கவனயீனத்தினாலும், பொறுப்பற்ற தன்மையினாலும் கை நழுவிப்போகின்ற அபாயம் ஏற்படுட்டிருப்பதையிட்டு அக்கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதோடு இவ்வபிவிருத்தி நிதி திசை மாற்றப்பட்டால் பாடசாலை அதிபருக்கெதிராகவும், வலயக்கல்வி அலுவலகத்திற்கெதிராகவும் பெரும் போராட்டம் ஒன்று நிகழும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்த வருடம் இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் நிதியானது இவ்வதிபரின் பொறுப்பற்ற தன்மையினால் பயன்படுத்தாமல் திருப்பியனுப்பப்பட இருந்தபோதும் குறித்த சிலரின் விடாமுயற்சியினால் காலம் நீடிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


இவ்வாறு பாடசாலையின் அபிவிருத்தியில் கவனயீனத்துடனும் வேண்டாவெறுப்புடனும், பொறுப்பின்றியும் செயற்படுகின்ற குறித்த 1AB பாடசாலையின் தகுதியற்ற அதிபர், இன்னும் இப்பாடசாலையில் அதிபராக நிலைத்திருப்பாராயின் சிறிது காலத்துக்குள்ளேயே இப்பாடசாலை30 வருடங்கள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை!!

எனவே, இக்கிராமத்தின் நன்மை கருதியும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும், பாடசாலையின் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் ஊக்குவிக்குமுகமாக  தற்போதைய ஆளுமையற்ற அதிபரை மாற்றி, பொருத்தமான ஆளுமையும் தகுதியுமுள்ள அதிபரை நியமித்துத் தருமாரு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் இதில் முழுக்கவனத்தையும் செலுத்தி குறித்த பாடசாலையின் அதிபரை மாற்றி கல்விக்கும் அபிவிருத்திக்கும் மற்றும் சமூக நன்மைக்கும் உரமூட்டுவார் என்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

-நன்றி-

Thursday 18 February 2016

வரலாற்றுத் தலைவன்

வரலாறு சொல்லாத உண்மைகள் ஏறாளம்... அதற்குக் காரணம் அரசியலதிகாரம் படைத்தவர்கள் வரலாற்றை மாற்ற நினைப்பதுதான். ஆனால் அதிகாரத்தாலும், வஞ்சனையாலும், வாய்ப்பிதற்றலினாலும் மாற்ற முடியாதளவிற்கு வரலாறு படைத்தவர்தான் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் என்பதை யாரும் மறுக்கமுடியாது! பணத்தையும், பதவியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு அரசியல் சூழ்ச்சி செய்து அரியாசனை ஏறத் துடிக்கின்ற இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியிலே இவரின் சேவையை ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு இன்று எமது சமூகத்தில் அரசியல்வாதிகள் இல்லை என்பதே யதார்த்தம். 

தூரநோக்கும், கலைரசனையும், கல்விஞானமும் கொண்டு அக்கரைப்பற்று மண்ணிலே முத்தாக ஜொலித்த மக்களின் சொத்தை முற்றத்து மல்லிகை மணக்காது என்பதுபோல அம்மக்களே இன்று தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக கையேந்தி நிற்கின்றனர்(இவரின் சேவைகளை நான் சொல்லவேண்டிய அவசியமில்லை). இது எமக்கு நாமே செய்துகொண்ட வரலாற்றுத் துரோகம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும். எதிர்காலம் நம்மை பழிக்கும். அந்நாளில் நாம் எட்டப்பர்களாகவே அவர்களுக்குக் காட்சிளிப்போம் என்பதில் சந்தேகமில்லை.

தன்னோடு பயணிக்கும் நண்பன் விழுகின்றபோது தாங்கிக்கொள்பவன்தான் உண்மையான தோழன். நண்பன் விழுகின்றபோது அவனை விட்டுவிட்டு இன்னொருவரின் முதுகிலே ஏறிக்கொள்கின்ற வஞ்சக நெஞ்சம்படைத்த அரசியல்வாதிகளிடையே தான் தோற்றாலும் நம்பியவரை கைவிடக்கூடாது என்ற செஞ்சோற்றுக் கடன் கழித்த நவீன கர்ணன் அதாஉல்லா என்றால் அது மிகையாகாது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் சேவையின் வெளிப்பாடுகள் மாகாணசபை உறுப்பினர் திரு. உதுமாலெப்பையின் மூலமாக எமது ஊரிலும் வெளிப்பட்டிருப்பதை  அனைவரும் அறிவோம். மக்கள் இவர்களை மறந்தாலும் எமது மண் இருக்கின்ற காலமெல்லாம் மறையாது இவர்களின் புகழ்!

“உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்” என்ற கண்ணதாசனின் பொன்னான வரிகள் இவர்களுக்கும் பொருந்தும். அரசியல் அதிகாரம் இருக்கின்றபோது இவர்களோடு ஒட்டியிருந்து அரசியல் இலாபமடைந்தவர்கள் அதிகாரம் இல்லை என்று தெரிந்தபின் பழுத்த இலைகளாக உதிர்ந்துவிட்டனர். ஆபத்தில் உதவுபவன்தான் உண்மையான நண்பன் அதனை மஹிந்தவுக்கா அதாவுல்லாஹ்வும், அதாவுல்லாஹ்வுக்காக உதுமாலெப்பையும் காண்பித்திருக்கின்றனர். ஆனால் நமது மக்கள்????

இன்று எமது சமூகத்திற்காக இருக்கின்ற அரசியல்வாதிகளை சிந்தித்துப் பாருங்கள்! அவர்களிடையே அதிகார வெறி மட்டுமே எஞ்சியிருக்கின்றது. அரசியலதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்கல்களைத் தவிற மக்களுக்கு என்னசேவைகள் செய்திருக்கின்றார்கள்?? இன்று கட்சிகளுக்காகவே மக்கள் வாழ்கின்றனர். ஆனால் மக்களுக்காக கட்சிகள் என்ன செய்திருக்கின்றது!? போராளிகள் போராளிகளாகவே இருக்கின்றனர் ஆனால் சுகபோகங்களையும், சலுகைகளையும் அட்டைபோல் ஒட்டியிருக்கின்ற சில சுயநலவாதிகளே அனுபவிக்கின்றனர். மக்களின் பிரதிநிதிகள் இருந்தும் அரசியலில் எமது மக்கள் இன்னும் அநாதைகளாகவே புறக்கணிக்கப்படுகின்றனர். எத்தனை நல்லாட்சி மாறியும் மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் இல்லை என்றால் அவ்வாட்சி எவ்வாறு நல்லாட்சியாகும்!!?? அத்தனையும் கானல் நீராகவே காண்கின்றேன்!

அரசில்வாதிகள் மேடை மேடையாக ஏறி தமது வாக்குப் பெட்டிகளை நிறப்புவதற்காக தொண்டைத் தண்ணீர் வற்றுமளவிற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர் பாவம் எம் மக்கள் படித்திருந்தும், அனுபவமிருந்தும், துணிவிருந்தும், மாற்றத்திற்கான பலமிருந்தும் அவர்களின் வாக்குறுதிகளை நம்பி நம்பியே ஏமாந்துவிடுகின்றனர். இதுவே காலாகாலம் அரங்கேருகின்ற கண்துடைப்பு நாடகமன்றோ......ஆனால், வாக்குறுதிகளுக்கு மேலாகவே பல்வேறு சேவைகளை அழகியமுறையில் செய்துகாட்டியவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்கள். இன்றிருக்கின்ற அமைச்சர்களோடு இவரை ஒப்பிட்டுப்பாருங்கள் உண்மைகளை உங்களின் சிந்தைகள் உணரும்.

-நன்றி-

Monday 1 February 2016

67 சுதந்திர தினங்கள் முடிந்தும் உறுதிப்படுத்தப்படாத சுதந்திரம்!


எதிர்வருகின்ற 2016.02.04 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில்(பெரும்பாலும்) இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடவிருக்கின்ற இவ்வேளையில் இதுவரை காலமும் பல்வேறு இனத்தவர்களைக் கொண்ட எமது இலங்கை மக்களிடையே உண்மையான சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளதா என்பதே இன்றைய கேள்விக்குறியாக இருந்துவருகின்றது.

பல்லின மக்கள் வாழ்கின்ற நமது இலங்கைத் தீவிலே ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தாமலும் நாட்டில் எந்தவொரு இடத்திலேயும் எந்நேரத்திலும் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் அரசியல் தலையீடுகளின்றியும் தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவகையிலும் ஆட்சியும் அதிகாரமும் அனைவருக்கும் சமமாகவும், சட்டமும் ஒழுங்கும் பொதுவானதாகவும், சலுகைகள் அனைத்தினத்தவருக்கும் சமமானதாகவும் வழங்கப்படுகின்றபோதுதான் அங்கே மக்களின் உண்மையான சுதந்திரம் உறுதிசெய்யப்படுகின்றது.

2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக்கொண்ட எமது தாய்த்தேசத்தில் 133வருட வெள்ளையர்களின் பிடியிலிருந்து விடுபட்டு 1948ல் சுதந்திரம் என்ற பெயர் பெற்று 1972ல் குடியரசான எமது தாய்நாட்டில் 1983 கறுப்பு ஜுலையுடன் ஆரம்பமாகிய  இன அடக்குமுறைக்கு எதிராக உருவான ஆயுதப்போராட்டம்  30வருடங்களின் பின்னர் ஸ்த்தம்பிதம் அடைந்தமையும் அதன் பின்னர் மக்கள் பகிரங்கமான அரசியல் அடக்குமுறைக்கு உள்வாங்கப்பட்டு பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகின்றமையையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

1948 முதல் கடந்த 2015 பெப்ரவரி 4ஆம் திகதி வரை நடைபெற்றிருந்த 67 சுதந்திரதின நிகழ்வுகளும் இலங்கை, வெள்ளையர்களிடமிருந்து விடுபட்ட நாளினையே நினைவு கூறுகின்ற ஒரு தினமாகவே அமைந்திருக்கின்றதே தவிற அவை மக்களுக்கான உண்மையான சுதந்திரத்தை வெளிப்படுத்திய தினமல்ல என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அத்தோடு, யுத்தவெற்றியின் பின்னரே சிறுபான்மையினர் அரசியல்ரீதியாக அதிகமான அடக்குமுறைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதுடன், காணிகளும், உடமைகளும் சுவீகரிக்கப்பட்டமையும் அவ்வடக்குமுறைகளில் இலங்கையரசு நேரடியாகத் தொடர்புபடாமல் வேறு சில அமைப்புக்களின் மூலமாகவே செயற்பட்டதையும் அறியாமலில்லை.

கடந்தகால ஆட்சியில், இலங்கையின் சட்டமும் ஒழுங்கும் அதிகமாகப் பிரையோகிக்கப்பட்டது சிறுபான்மையினர் மீதுதான் என்பதுடன் தெளிவான ஆதாரங்களுடன் பகிரங்கமாக வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் அரசின் சலுகைகளை நன்கு அனுபவித்துக்கொண்டனர் என்பதே யதார்த்தம். வெவ்வேறு துறைகளில் படித்துப்பட்டம் பெற்ற எத்தனையோ பட்டதாரிகள் இருக்கும்போது திறமைகள் புறந்தள்ளப்பட்டு அரசியலதிகாரமும், பணப்புலக்கமும் கொண்ட அறிவு, திறன், மனப்பாங்கில் தகுதியற்றவர்களே இன்று அதிகமான வேலைத்தளங்களில் நுழைந்து கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தி சீரழித்துச் செல்கின்றனர்.

எதிர்வருகின்ற 68வது சுதந்திரதினமாவது தனிமனித பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு எம் தேசமக்களின் வாழ்விற்கான விடியலை ஏற்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மக்களுக்கான 1வது சுதந்திர தினமாகவும்,  அரசியல் தலையீடுகளற்று திறமைகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற வகையிலும், கல்வி, விளையாட்டு, மருத்துவம் போன்ற அனைத்துத்துறைகளிலும் திறமையுள்ள மக்கள் சுதந்திரமாகப் பங்குப்பற்றக்கூடிய வகையிலும், இன வன்முறைகளைத் தோற்றுவிக்காமலும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்களுக்குப் பங்கம் ஏற்படாததாகவும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கொண்டதாகவும் அமையவேண்டுமென்பதே எமது அவா.

-நன்றி-

Friday 29 January 2016

2013 பெப்ரவரி 3 ஆம் திகதி “லங்காதீப” பத்திரிகையில்.....



கடந்த 2013 பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. 
தற்போது இலங்கையில் பொதுபல சேனா மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்கள் இனவாத மதவாத அமைப்புகள் முஸ்லிம்களின் இந்நீண்ட வரலாறுகளை பகிரங்கமாகவே மறுத்துவருவதுடன் மார்க்க கிரிகைகளையும் கலாசார விழுமியங்களையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். இந்நிலையில் மனிதத்தன்மையுடனும் நடுநிலை தன்மையுடனும் நடந்து கொள்ளும் நல்லுள்ளம் படைத்த பௌத்த மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காலத்தின் நிலவரங்களை கவனத்தில் கொண்டு மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவரும் நோக்கில் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் இக்கட்டுரையை எழுதியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்.
சகோதரத்துவம் எனும் உறவு சிங்கள முஸ்லிம்களுக்கிடையில் மிகவும் பிணைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது.
முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்கையில் பழங்காலங்தொட்டே இலங்கையுடனும் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் உறவுகளை பேணி நடந்தமைக்கான சாட்சி வரலாற்றில் காணப்படுகிறது. அந்த உறவு பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் என இருவகைப் படுகிறது. 7-8 நூற்றாண்டு ஆளுகையில் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் வர்த்தகத்தை மையமாக வைத்து இந்நாட்டுடன் மிக பலமான உறவை கட்டியெழுப்பியிருந்தனர். அதுமட்டுமின்றி அராபியர்கள் இலங்கை பற்றி எழுதிய நூற்களை பார்க்கையில் அவர்கள் இலங்கை சம்பந்தமாக மிகவும் கவனம் செலுத்தியுள்ளதாக சாட்சி காணப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கம் (இலங்கை) வருவதற்கு முன் நீண்ட காலம் தொட்டே அரபியர்கள் எனும் முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கைப் பற்றி அறிந்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் இந்நாட்டின் விடயங்களை அராபி பயணிகள் மூலமே அறிந்து கொண்டனர். அப்படியிருந்தும் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் மூலம் எழுதப்பட்ட நூற்களில் இலங்கை பற்றிய செய்திகள் இஸ்லாம் தோன்றிய பின்பே எழுதப்பட்டுள்ளது. முதலில் சுலைமான் என்பவர் மூலமே இந்நாடு பற்றி எழுதப்பட்டது. கி.பி 950-ம் ஆண்டு ஸில்ஸிலா அல்கவாரி எனும் நூலில் இலங்கைப்பற்றிய செய்திகள் உள்ளடக்கபட்டது. அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். இவ்வெல்லா விடயங்களையும் உள்ளடக்கி 10ம் நூற்றாண்டில் மஸ்கினர் எனும் எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுதினார் அதன் பின் மக்தஸி எனும் எழுத்தாளரும் இலங்கைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்தில் அபுல்தீதா போன்ற புவியிலாளர்கள் கூட இலங்கைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானவர் 15ம் நூற்றாண்டில் இந்நாட்டில் பயணித்தவரான இப்னு பதூதாவுடைய செய்தியாகும் குறிப்பாக 7ம் நூற்றாண்டு ஆகையில் மேற்கு திசை கடற்மார்கங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். தென் இந்தியாவில் சோழ பாண்டிய ஆட்சி விழுந்ததுடன் அராபிய ஆட்சி வளம் பெற்றது.
அதன்பலனாக கி:பி: 949ம் ஆண்டு ஆகையில் அராபிய கப்பல் வர்த்தக நிமித்தம் இலங்கைக்கு வந்தனர். 8ம் நூற்றண்டிலிருந்து பெறுமளவில் முஸ்லிம்கள் இலங்கையில் வளர்சிசியடைந்தனர். இலங்கையில் இருந்த இம்முஸ்லிமகள் இலங்கை முஸ்லிம்கள் என்றும் கடலோரப்பகுதி முஸ்லிம்கள் என்றும் அறியப்பட்டனர்.
அராபிய ஆட்சி தென் இந்தியாவில் வளர்ந்ததன் பின் முஸ்லிம்கள் வர்த்தகம் நிமித்தம் இலங்கைக்கு வந்தனர். அராபிய வர்த்தகர்கள் கொழும்பில் தங்கினர். 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அரபியர்கள் இலங்கையின் கடலோரப்பகுதிகளில் முழு உரிமையை பெற்றிருந்த அதேவேளை சிங்கள மன்னர்கள் மற்றும் சிங்கள மக்கள் ஆகியோருடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இலங்கையை ஸரன்தீப் என அழைத்தனர்.
இக்காலபப்பகுதியில் அராபிக் கடலின் கிழக்குப் பகுதியில் பிரதான வர்த்தக சந்தையாக “கொள்ளம்” எனும் இடம் விளங்கியது. இந்த இடத்திலிருந்து இரு பாதைகள் விரிந்து இருந்தன என 9-10 ம் நூற்றாண்டுகளில் அராபிய கப்பலோட்டிகள் எழுதிய குறிப்புகளில் உள்ளன. இவ்விரு பாதைகளில் ஒரு பாதை மன்னார் விரிகூடாவிலிருந்து கங்கை நதி கலக்கும் இடம் வரையாகும். மற்றப்பாதை நிகோபார் தீவினூடாக விரிந்து இருந்தது. வடக்கு பாதை பயணத்தில் முக்கிய இடமாக வடக்கின் எல்லையே காணப்பட்டது.
அதுமட்டுமன்றி இலங்கை மண்ணில் பிறந்த அனைத்து தமிழர்கள் குறித்தும் முஸ்லிம் இனத்தவர்கள் கவனம் செலுத்தினர். அவர்கள் வாசனை பொருட்கள் உற்பத்தியினை வெளி நாடுகளுக்கு கொண்டு சென்றனர். முஸ்லிம் வர்த்தக சமூகம் இலங்கையில் உருவானது இவ்வாறு தான்.
இச்சமூகத்தின் விதவைகள் மற்றும் அனாதை பிள்ளைகளை தஙகளது தாய் நாட்டுக்கு அனுப்புவதற்காக இலங்கை மன்னர் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைப் பற்றி 8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்பு குறிப்பிடுகின்றது. இதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் வர்த்தக சமூகத்தை எந்தளவு பாதுகாத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ஆராபிய முஸ்லிம்கள் இலங்கையில் மாணிக்ககல் சம்பந்தமாக எப்போதும் முக்கிய கவனம்செலுத்தினர். அன்று இலங்கை “மாணிக்ககல் தீவு” என்றே அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பெயருக்கு சமமான பெயராகவே “ஜஸீரதுல் யாகூத்” என முஸ்லிம்கள் அறிமுகப்படுத்ததினர். அவர்கள் முத்து வைரம் மாணிக்கம் சங்கு மிளகு சாம்புரானி போன்ற பெறுமதியுள்ள பொருட்களை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த முஸ்லிம்கள் இலங்கையில் பலாத்காரமாகவோ அல்லது ஆயுத பலத்துடனோ வாழ்ந்நதவர்கள் அல்லர். இந்நாட்டு மன்னர்களின் அனுசரனையுடனும் தனிப்பட்ட வியாபாரத்தின் பிரதிபலன்காரனமாகவுமே வாழ்ந்தனர்.
இவ்வாறாக கடலோரப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு சிங்கள மன்னர்கள் மதரீதியான சினேக உறவை கண்ணியப்படுத்தி இடம் கொடுத்தனர் என்றும் மதரீதியான சினேக உறவு சிங்கள ஆட்சியாளர்களிடம் தெளிவாக காணப்பட்டது என்றும் அராபிய வரலாற்றாசிரியர்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் இலங்கையில் மேற்கு கடலோரப்பகுதிகளில் பொருத்தமான இடங்களில் குறிப்பாக கழிமுகத்திற்கு அண்மையில் சிங்கள மக்களினதும் ஆட்சியாளர்களினதும் பாதுகாப்பு மற்றும் அன்பை பெற்று வாழ்ந்தனர்.
கடலோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஸ்ரீபாத மலைக்கு பக்கத்திலுள்ள பகுதிகளில் மாணிக்க கல் உள்ள இடம் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வாறான காரியம் இலங்கை மன்னர்களின் சம்பிரதாய அனுமதியுடனும் நாட்டு மக்கள் அவர்களுக்கு கொடுத்த உதவி ஒத்தாசைகள் மூலமே நடந்தவையாகும். அக்கால மக்கள் மார்க்கரீதியாக சமூக ரீதியாக எப்பேதமுமின்றி முஸ்லிம்களை வரவேற்றுள்ளனர் என்று இந்த வரலாறு மூலம் தெளிவாகின்றது.
(மத்தியக் கிழக்கில்) முஸ்லிம் ஆட்சி பலம் யாபகூவ இராசதானியத்தின் போது மேலும் வியாபித்து பலமடைந்திருந்தது. யாபகூவ ஆட்சியாளரான முதலாம் புவனேகபாகு மன்னர் முஸ்லிம் நாடான எகிப்துடன் 1283ம் ஆண்டு வர்த்தக உடன் படிக்கையொன்றை செய்து கொண்டார். அன்று எகிப்து மக்களுக்கு இலங்கை வர்த்தக குழுவொன்று சிங்கள மன்னரின் தூதுவொன்றை எடுத்துச் சென்றது. அத்தூதில்
“இலங்கை என்றால் எகிப்து. எகிப்து என்றால் இலங்கை. என் தூதர்கள் திரும்பி வரும்போது எகிப்தின் தூதுவர் ஒருவர் அவர்களுடன் வருவார். என்னிடம் அனைத்து வகையான முத்து மாணிக்கங்கள் பெருமளவில் உள்ளன. கப்பல்கள் யானைகள் துணிமணிகள் கருவா போன்ற அனைத்து வர்த்தக பண்டங்களையும் உங்களுக்கு அனுப்புவேன். (தோமர் என்று சிங்களத்தில் கூறப்படும்) பலகையினால் செய்யப்படும் ஆயுதத்திற்கு பொருத்தமான பலகையின் மரம் என் தேசத்தில் வளர்கிறது. வருடாந்தம் 20 கப்பல்களை அனுப்புமாறு சுல்தான் மன்னர் என்னிடம் கூறுவாரானால் அவைகளை வழங்குவதற்கு என்னால் முடியும். மன்னரின் ஆட்சியின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு எனது இராஜியத்தில் வர்த்தகம் புரிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. எனக்கு சொந்தமான 29 மாளிகைகள் உண்டு அதிலுள்ள களங்சியசாலைகள் அனைத்து வகையான மாணிக்கங்களால் நிரம்பியுள்ளன. சிப்பிகள் உள்ளன. அதிலிருந்து பெறப்படும் முத்துக்கள் எனக்கு சொன்தமானவை”
என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தன் மூலம் எமது நாடு முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவை ஏற்பட்டிருந்தது என்பது தெளிவாக காட்டுகிறது. இது அதற்கான ஒரு உதாரணம் மட்டுமே.

மும்மொழிகளில் எழுதப்பட்ட ஆவனமொன்று காலியில் கண்டெடுக்கப்பட்டது. அது சீன தமிழ் மற்றும் பார்சி மொழியில் எழுதப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இப்னு பதூதா இலங்கையின் ஸ்ரீபாத யாத்திரிகைக்கு வந்தபோது இலங்கை ஆட்சியாளரின் இராசதானிய நகரமான “கோனகர்” நகரத்தினுடாக போகையில் அவருக்கு கூடுதல் உதவி ஒத்தாசைகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வாறாக அக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் அதிகளவிலான உறவு ஏற்பட்டு இருந்தது.

மேலும் புவனேபாகு மற்றும் போர்த்தகேயருடனான போரின் போது சீதாவக்கை இராசதானியத்தின் மன்னரான மாயாதுன்னைக்கு முழுமையான ஓத்துழைப்பினை வழங்கியவர்கள் “செடோரின்” எனும் வர்த்தக குழுவாகும். செடோரின் என்பது முஸ்லிம்களாவர். இந்த வர்த்தக குலம் சீதாவக்கை இராசதானியத்துடன் வர்த்தக மற்றும் நட்புறவுவை பேணிவந்தது.
ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து இந்நாட்டைமீட்கும் சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம் தலைவரான T.B ஜயா அவர்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினார்கள். அன்று இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்று பேதம் இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பாரிய பங்களிப்பை செலுத்திய T.B. ஜயா அவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக கொழும்பு நகரத்தின் வீதியொன்றுக்கு அன்னாரின் பெயர் சூட்டப்பட்டது. அன்று இந்நாட்டு சிங்கள தலைவர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றினார் T.B. ஜயா அவர்கள்.
சாந்தி சமாதானத்தை பரவச் செய்து
குலவாத பேதத்தை நீக்கச் செய்து
சம உபகாரத்தை மேம்படச் செய்து
நாம் வளர்வோம் உயர்வோம் ஒன்று பட்டு.

அன்று சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் ஒரே உணர்வுடன் சகோதரத்துடன் இணைந்து பணியாற்றினார்கள். அந்த உறவின் ஆரம்பத்தை தேடும் பயணத்தில் வரலாற்றின் மூலம் வெளிப்படும் உண்மை இது.
மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி

பொதுபலசேனா அமைப்பின் ஆரம்ப “வித்து” எது?


இக்கேள்விக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை தமது அறிவுக்கெட்டியவகையில் பல்வேறு ஊடகங்களினூடாக தினமும் கூறுவதை நாம் அன்றாடம் அவதானிக்கின்றோம். உண்மையில் இலங்கையில் நடப்பது என்ன? பொதுபலசேனாவின் ஆரம்ப வித்து எது? என்ற வினாவுக்கான விடையினைத் தெளிவாக அறிந்துகொள்வதற்காக நாம் தற்காலத்துடன் கடந்த காலத்தையும் இணைக்கவேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைகளின் உருவாக்கத்தின் ஆரம்பமும் அதன் தெளிவும் கிடைக்கும்.

கல்வியும். பொருளாதாரமும் ஒரு நாட்டின் முதுகெலும்பு எனலாம். ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்கு இவையும் முக்கிய காரணிகளாக அமைகிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற எமது இலங்கையைப் பொருத்தளவில் பொருளாதார ரீதியாக முஸ்லீம்களே வளர்ந்து வருவதை அனைவரும் அறிவர்.

பொருளாதாரத்தில் முஸ்லீம்கள் ஓங்கி நிற்பதை சகித்துக்கொள்ளமுடியாத துவேச பேரினவாதிகளால் இலங்கை வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915ல் சிங்கள முஸ்லிம் கலவத்தைக் கூறலாம். இக் கலவரம் 1915 மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தாலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதால் பாதிப்புக்கள் முஸ்லீம்களுக்கே அதிகமாக இருந்தது.

1915 மே 29  இல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர். இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவாரக இருந்த பொன் இராமநாதன், துவேச சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டமையும், அன்றைய ஆங்கிலேய அரசினால் கைதுசெய்யப்பட்ட  டீ. எஸ் சேனானாயக்கா, எப். ஆர் டயஸ் பண்டாரநாயக்காடீ. எஸ் விஜேவர்தனாடொக்டர் நெயிசர் பெரேராஈ. டீ. த சில்வாஎச் அமரசூரியஏ. எச். மொலமூறே பல சிங்களத் தலைவர்களை இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களை மீட்டுவந்தமையையும், அவர் நாடு திரும்பியதும் வண்டியில் பொன் இராமநாதனை வைத்து சிங்கள சகோதரர்கள் தாமாகேவே வண்டியை இழுத்து வீடுவரை கொண்டு சேர்த்தமையையும் நாம் அறிந்தவையே. ஆனால் கடந்த 30வருட ஆயுதப்போராட்டத்திற்கு வித்திட்ட 1983 ஜுலை 23ல் ஏற்பட்ட தமிழ் சிங்கள கலவரத்தையும் எந்தத் தமிழரும் மறந்திருக்கமாட்டர்கள்.


மேலே கூறிய கடந்தகால வரலாற்றை ஒவ்வொருவரும் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அன்றைய இனக்கலவரத்தின் ஆரம்பமே பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமையும், முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டமையுமே என்பது புலனாகும். அன்றைய கலவரத்தின் ஆரம்ப நிலையும், இக்கால பொதுபலசேனாவின் செயற்பாடுகளும் ஒருமித்ததே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். 

2011 மே 05ஆம் திகதி விமலஜோதியின் தலைமையில் புத்த கலாச்சார மையத்தை மஹிந்த ராஜபக்ஷவே திறந்து வைத்தார் உண்மையில் பொதுபலசேனாவின் ஆரம்ப வித்து இதிலிருந்துதான் தூவப்பட்டது என்பதை யாரும் மறந்துவிடலாகாது. 2013, 2014 காலப்பகுதியில் பொதுபலசேனாவின் தலைமையகமும் இந்த புத்தகலாச்சார மையத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்ராவில்தான் இயங்கிவந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்ல 2013 மார்ச் 9 அன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், பொது பல சேனாவின் கலாச்சாரம் மற்றும் பயிற்சி மையமான "மெத் சேவனா" பிலனாவில் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

பொதுபலசேனா எனும் இவ்வமைப்பினை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான நகர்வுகளுக்காகவும், முஸ்லீம்களின் வர்த்தகத்தை முடக்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுத்து தமது அடிமைகளாக அடிபணிய வைப்பதற்காகவும் மக்களிடையே அணையா நெருப்பாக என்றுமே எரிந்துகொண்டிருக்கக்கூடிய இனவாத உணர்வை ஓங்கச் செய்வதே துவேச அரசியல்வாதிகளின் நச்சு எண்ணங்களாகும். அதனால்தான் நோ லிமிட் போன்ற இலங்கை முஸ்லீம்களின் வர்த்தக மையங்களின் மீதான அடாவடித்தனங்களும், பள்ளிகள் உடைப்பு, நோன்புகால கிரீஸ் மனித தோற்றம், ஹபாயாவுக்கான எதிர்ப்பு, ஜும்மாவுக்கான எதிர்ப்புக்கள், ஹலால் உணவுப் பிரச்சினை........ இவ்வாறு முஸ்லீம்களுக்கான பொதுபலசேனாவின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சினை என்பதால் உலக நாடுகள் வழமையைப்போல் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொள்கின்றன.

ஆனால் இன்று எமது சிங்கள சகோதரர்களில் பெரும்பாண்மையினர் இனத்துவேசத்தையும், இனக்கலவரத்தையும் விரும்பாமையாலும், அனைத்து இனங்களுடனும் நல்லுறவைப் பேணவேண்டுமென்ற தூய எண்ணங்களுடனும் சுமூகமான வாழ்வை நோக்கிப் பயணிக்கின்னர். இதற்கு தக்க ஆதாரமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு பாரியதொரி தோல்வியினைக் கண்டதைக் குறிப்பிடலாம்.

எனவே, சில அரசியல்வாதிகள் பொதுபலசேனா எனும் இனத் துவேசக்கட்சியினை உருவாக்கி இனப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு அதனைப் பின்னணியாக வைத்து அரசியல் செய்வதற்கு முனைகின்றனர் என்பதையும், அதற்கு மாற்றுமத சகோதரர்களில் ஒர் சிலரைத்தவிர ஏனையோர் இனத்துவேசத்தை விரும்பவில்லை எனவும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். 



மேலதிக தகவல்களுக்காக

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்



  1. நன்றி

Saturday 23 January 2016

ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகிறதாம்......

அரசியல் கட்சியினைப்பற்றி குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சிந்திக்கும் சிலர் அரசியல் அனுபவங்களையும் ஒரு கிணற்றுத்தவளைபோலவே காண்கின்றனர். சிறந்த தொண்டர்களாக இருக்கும் இவர்களின் சிந்தனைகள் குறித்தவொரு வட்டத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் சுழல்கின்றன. 

ஒவ்வொரு பிரதேசவாதியும் தமது பிரதேசங்களை மட்டுமே சிந்திக்கின்றனர், ஆனால், அரசியல் கட்சியின் தலைமை எப்போதும் நாடுதழுவிய ரீதியிலேயே மக்களைப்பற்றி் சிந்திக்கும். அத்தோடு தமது கட்சியின் எதிர்காலத்தினையும், அதன் வளர்ச்சியினையும் கருத்திற்கொண்டே செயற்படும். கட்சியின் வீழ்ச்சிக்கு எவ்வகையிலும் துணைபோகாதவாறு வழிநடாத்துவதே தலைமைக்குள்ள திறமையும், அறிவாற்றலும் சிந்தனா சத்தியுமாகும். இவற்றை மக்கள் புறிந்துகொள்வதில்தான் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் நடுநிலையாக சிந்திக்கவேண்டும். அப்படி நடுநிலையாக நிந்திக்கின்றவர்களை ஏனைய கட்சித் தொண்டர்களும், குண்டர்களும் பிரதேசவாதக் கருத்துக்களையும் போலி வாதங்களையும் முன்வைத்து அவர்களை திசைதிருப்ப முனைகின்றனர். இந்தநேரத்தில்தான் கட்சிபற்றி பொதுவாக சிந்திக்கவேண்டும். தமது கட்சி எதற்காக இவ்வாறு செய்தது என்று விரிவான சிந்தனையை நமக்குள்ளேயே உருவாக்கி ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும். தமது வேகத்துடன் விவேகமும் இருக்கவேண்டும். அதுதான் ஒரு சிறந்த தொண்டனுக்குரிய சிறப்பம்சம்.

“ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை”போல் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கிறது. அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களின் சுயமான சிந்தனையைக் கூட தடுத்து வேறுவகையில் திசைமாற்ற எத்தனிக்கின்ற மாற்றுக்கட்சி நரிக்கூட்டங்களின் தந்திரங்களை அறிந்துகொள்ளவேண்டும். தேசியப்பட்டியலால் பாதிக்கப்பட்ட எமதூர் மக்களுக்கு மனதிலே கவலை இருக்கத்தான் செய்யும் ஆனால் அத்தேசியப்பட்டியல் எதற்காக கிண்ணியாவுக்குச் சென்றது என்பதை நாம் அலசி ஆராய்ந்து சிந்திப்பது ஒவ்வொரு தொண்டருக்கும் கடமை எனலாம்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை எனும் மூன்று மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அம்பாறை மாவட்டத்தில் திரு.மன்சூர், திரு.பைசல் காசிம், திரு.ஹரீஸ்  போன்றோரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் திரு. அலிசாஹிர் மௌலானா அவர்களும் இருக்கின்றனர். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எவருமில்ல! இந்நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்சிரஸ் என்ற கட்சிக்கே இடமில்லாமல் ஒரு மாவட்டத்தையே இழக்க நேரிடலாம். அங்கிருக்கின்ற மக்களும் அல்லல்பட்டு தமது உரிமைகளை இழக்க நேரிடலாம். இவற்றைப் பயன்படுத்தி ஏனைய கட்சிகள் உள்நுழைந்துகொள்ளும். என்ற அச்சம் நிலவியது. இக்கால கட்டத்திலேதான் அதிகமாக முஸ்லீம்களைச் சுமந்திருக்கின்ற கிண்ணியாவிலே சுமார் 27000வாக்குகளைப் பெற்ற திரு.M.S.தௌபீக் அவர்களை கட்சி முடிவெடித்தது. இம்முடிவானது முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சியையும், வீழ்ச்சியடையாத தன்மையினையும் கருத்திற்கொண்டே எடுக்கப்பட்டது எனலாம்.

சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு தொண்டரும் சுயமாகச் சிந்திக்கவேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். உங்களது சிந்தனைகள் பரந்துபட்டதாக இருக்கவேண்டும். பிரதேசவாதங்களைவிட தனி ஒரு மாவட்டம் அநாதையாவதைப்பற்றி தீவிரமாகவும், நடுநிலையாகவும் யோசிக்கவேண்டும். அறிவாற்றலும் அனுபவமும் நிறைந்த எமது முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ தலைவர் நடுநிலையாக நிந்தித்திருக்கின்றார். அதேபோல் இரண்டு அமைச்சுக்களை எமது அம்பாறை மாவட்டத்திற்கே கொடுத்திருக்கின்றார். அத்துடன் மாகாண சுகாதார அமைச்சை எமது பிரதேசத்திற்குள்ளேயே வடிவமைத்திருக்கின்றார். இதுபோலவே, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சைப் பரிசளித்திருக்கின்றார். இப்படி ஒவ்வொன்றையும் மக்களுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் செதுக்கிய சிந்தனை சிற்பியின் வியுகத்தை அனைவரும் தெரிந்து தெளிந்துகொள்ளவேண்டும்.

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களில் சிலர் எதற்காகப் பிரிந்து சென்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் அவரவரின் தனிப்பட்ட சுயஇலாபத்திற்காகவும், தலைமைத்துவப்போட்டி காரணமாகவுமே கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளை அமைத்துக்கொண்டனர் என்பதனை தெளிவாக அறிந்துகொள்வதே எமது தெளிந்த சிந்தனைக்கு உரம்போன்றது.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், மாற்றுக்கட்சிக் குள்ளநரிகூட்டங்கள் பிரதேசவாதத்தைக்கூறி வடிக்கின்ற முதலைக் கண்ணீரின் தந்திரவலைக்குள் விழுந்துவிடாமல் சமூகத்தின் விடியலை நோக்கிப் பயணிக்கும் நமது கட்சியின் முன்னேற்றத்திற்கு விழுதுகளாக பலம்கொடுப்போம்.

-நன்றி-

Friday 22 January 2016

எச்சரிக்கை!! பாதுகாப்பே முதன்மை!


தற்காலத்தில், மனிதன் இயந்திரம்போல் மாறிவிட்டான். அவனது தேவைகளும் பொறுப்புக்களும் அதிகரித்தமையே இதற்கு காரணம் எனலாம். தமது வேலைப்பழு காரணமாக தூங்குவதற்கு நேரமின்றி, தனது அயலவர்-சொந்தங்களுடன் உறவாடுவதற்கு நேரமின்றி, தமக்குப்பிடித்த உணவுகளை சுத்தமாக சமைத்துச் சாப்பிட நேரமின்றி அல்லலுடன் தமது வாழ்வுச் சக்கரத்தை உருட்டிச் செல்கின்றான். கடைகளிலோ, எப்படிப்பட்டவர் என்று அறியாதவரிடமெல்லாம் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றான். இதனால் தோல் நோய்முதல் அனைத்து நோய்களும் தேவையற்ற வகையில் அவனுக்கு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றான். சிலவேளைகளில் உயிரை மாய்த்துக்கெள்கின்ற ஆபத்தான நோய்களுக்கும் ஆளாகின்றான்.

“தாயும், தந்தையும் எய்ட்ஸ்நோயற்றவர்கள் ஆனால் எந்தவித கெட்டபழக்கங்களும் இல்லாத பிள்ளைக்கு எயிட்ஸ்!” 

“பாடசாலை மாணவர்களுக்கு எயிட்ஸ்!”

“பெற்றோர்கள் வைத்தியர்கள், பிள்ளைகளுக்கு எயிட்ஸ்”

“வைத்தியருக்கே எயிட்ஸ்”

இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி ஊடகங்களினூடாக அறிந்துகொள்கின்றபோது எமக்குள்ளே அவர்களைப்பற்றி பாலியல் சம்மந்தமான தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக்கொள்கின்றோம். எயிட்ஸ் என்பது முறையற்ற பாலியல் தொடர்பினால் வருவது மட்டுமல்ல, முறையற்ற உணவுப்பழக்கத்தி்னாலும் வருகிறது!

அதிலும் குறிப்பாக பேரூந்து, தொடரூந்து (பஸ், ரயில்) மற்றும் ஏனைய பயணங்களின்போது உள்ளேயும், வெளியேயும் வெட்டி விற்கப்படுகின்ற மாங்காய், அன்னாசி போன்ற உணவுப்பொருட்களை நாம் வாங்கிச் சாப்பிடுகின்றோம். அதேபோல் மாணவர்களும் வெளியிலே வெட்டி விற்பனை செய்யப்படுகின்ற உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து உட்கொள்கின்றனர். விற்பனையாளியின் தன்மை, அவருக்கு எவ்வகையான நோய்கள் உள்ளன என்பதையெல்லாம் பொருட்படுவத்துவதே இல்லை இதனால் பாரிய நோய்களை எம்முடலினுள் நாமே எமக்குத் தெரியாமல் ஏற்றிக்கொள்கின்றோம். 

எப்படியெனில்.........

உதாரணமாக, மாங்காய், அன்னாசி போன்ற உணவுப்பொருட்களை வெட்டி விற்பவருக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவர் வெட்டும்போது அவருக்குத்தெரிந்தோ - தெரியாமலோ இரத்தக் கசிவு ஏற்பட்டு அந்த இரத்தம், வெட்டப்படும் உணவுப்பொருளிலும் படிந்தால் அதனை உட்கொள்ளும் எமக்கும் அந்த எய்ட்ஸ பரவும் ஆபத்தான நிலை ஏற்படும். இதனால் நாம் எயிட்ஸ் நோயாளியாகின்றோம். இவ்வாறுதான் ஏனைய நோய்களும் பரவுகின்றன. 

பயணங்கள் செல்கின்றபோது உணவுப் பொருட்களை உங்களது வீடுகளிலே சமைத்து எடுத்துச் செல்வதே உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையது என்பதை அனைவரும் அறிந்(துவைத்)திருத்தல் நல்லது.

பொருத்தமான வகையில் பரிசோதிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்ந்த ஏனைய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்வதனால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். 

இதேபோன்றுதான் தலைமுடி வெட்டுமிடங்கள்போன்ற இரத்தத்தோடு சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மிகுந்த பாதுகாப்புடன் செயற்படுதல்வேண்டும்.

“வெள்ளம் வருமுன்னரே அணை கட்டுவோம்” என்பது போல, நோய்கள் வருமுன்னரே பாதுகாப்பை மேற்கொள்வோம்.




நன்றி

Tuesday 19 January 2016

அரசியலும் சமூக அவலங்களும்




எமது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னர் ஒரு காலம் இருந்தது..... 
1995ற்கு முன்னர் பிறந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் (அதாவது சுமார் 20 வருடங்களுக்கு முன்னர்.) அன்று போட்டிகளில்லை, பொறாமைகள் இல்லை, குரோத மனப்பான்மை இல்லை, வஞ்சகமில்லை. வரட்டுக் கௌரவமில்லை. மக்களிடையே அன்னியோன்னிமான வாழ்வு இருந்தது, அண்டை வீட்டார்கள் பசித்திருக்க ஏனையோர் புசிக்கமாட்டார்கள்,  ஒருவர் வீட்டில் சமைக்கின்ற “கறி” ஏனைய குடும்பங்களுக்கும் பரிமாறப்படும். குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து சொந்தங்களோடு இணைந்திருக்கும், அன்பில் பாசப்பிணைப்பு இருந்தது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். இவ்வாறு அன்றைய வாழ்வு மனதுக்கு இதமான சந்தோசத்தையும், அமைதியையும் தந்தது. அதனால் அன்றைய மக்கள் தங்களிடையே பதற்றமின்றி(Tension) சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து சந்தோசமாக இருந்தனர். அன்றும் அரசியல் இருந்ததுதான்.............

ஆனால் இன்று  எமது மக்களிடையே பல்வேறுபட்ட சுயநலக்காரணங்களுக்காக தமது உறவுகளைப் பகைத்துக்கொண்டு வாழ்கிறோம். அதிலும் குறிப்பாக அரசியலால் பிரிந்தவர்களே அதிகம்! குறிப்பிட்ட காலம் மட்டுமே மாறி மாறி வருகின்ற அரசியலுக்காக நமது உறவுகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்வதா?? ஆட்சியும், அதிகாரமும் இன்றிருக்கும் நாளை இன்னொருவனின் கையில். அதற்காக நாம் வாழ்நாள் முழுதும் அடிமைகளாக வாழ்வதா??

நாம் ஒவ்வொருவரும் கட்சி கட்சியாகப் பிரிந்துகொண்டும், கட்சிகளுக்குள்ளேயே பிரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் தூற்றியும், தங்களின் உறவுகளை தாங்களே இழிவுபடுத்திக்கொண்டும், போட்டியென்ற பெயரில் பெறாமைகளை நெஞ்சிலே சுமந்துகொண்டு வஞ்சகப்புகழ்ச்சிகளை நாவிலே வழியவிட்டு வாழ்வதும், தங்களுக்குள்ளே சிறு சிறு குழுக்களை அமைத்துக்கொண்டு ஏனைய சகோதரனுக்கு எதிராக ஏவிவிடுவதும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் மூழ்கிக் கிடப்பதும்தான் இன்றைய அரசியலா???

வெளிநாட்டு அரசியலைச் சிந்தித்துப் பாருங்கள். அங்கே ஒரே மேடையில் எதிர்க்கட்சிகள் தமது பிரச்சாரங்களில் ஈடுபடுவர். (உதாரணத்திற்கு அமேரிக்கா, ரஷ்யா, போன்ற மேற்கத்தேய நாடுகள்) அவரவர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைக் வெளியிடுவர், எவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் விரும்புகின்றார்களோ அவர் வெற்றிபெறுவார் சிறந்த ஆட்சியும் அமையும்.

ஆனால் எமது ஊரிலே அரசியல் பிரச்சாரங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வன்முறைகளும், ஒருவரை இன்னொருவர் ஏசித் தீர்ப்பதும், மற்றவருக்கெதிரான வஞ்சகச் சூழ்ச்சிகளை அமைத்தலும், வெற்றிபெற்றவர், ஏனைய தோல்வியுற்றவர்களின் வீடுகளை-சொத்துக்களை சேதப்படுத்துவதும், நண்பர்கள் சகோதரர்களை பழிவாங்குவதும் இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள குண்டர்களை உருவாக்கி ஏனையோர் சட்டத்திலிருந்து நழுவி விடுகின்றனர். ஆனால்அப்பாவி குண்டர்கள் சட்டத்திரைக்குள் அப்படியே அடைபட்டு அவர்களுடைய வாழ்வை முடக்கிக்கொள்கின்றனர்.

சிந்திக்கும் ஆற்றலும், நல்லொழுக்கமும், சிறந்த அறிவுமுடைய மக்களாகிய நாம் அரசியலில் சிந்திக்கவேண்டும்! தம்மை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி குளிர்காயும் சுயநலவாதிகளின் வஞ்சத்தன்மைக்கு ஒருபோதும் ஆளாகி, அடிபணிந்து தம்மைத்தாமே அழித்துக்கொள்ளக்கூடாது. சுடலைஞானம்போல் அவ்வப்போது வருகின்ற தேர்தல் வாக்குறுதிகளால் அடிமையாகிவிடக்கூடாது. இவ்வாறு சிறந்ததை மக்கள் சிந்திப்பதனூடாகவே எமது ஊரில் சேவை செய்யும் உண்மையான அரசியல்வாதிகளை நாமே உருவாக்கமுடியும்! சேவைகளும் அதிகரிக்கும், சமூகமும் செழிக்கும். 
நாம், வன்முறையற்ற அரசியல் உரிமையினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். நடுநிலையாக சிந்திக்கவேண்டும். எமது ஊரைப்பொருத்தளவில், உண்மையான அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டு கொள்ளவேண்டும்! யார் மக்களுக்காக பாடுபடுபவர் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். மக்களின் துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவரை ஒருபோதும் நாம் மறந்துவிடல் கூடாது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வாக்குகளை இடும் உரிமையுண்டு அதனை அவரவர் நல்ல சமூக சிந்தனையுடன் பயன்படுத்தவேண்டும். நமது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கு நாமே வித்திடவேண்டும். நாம் எமது வாக்குரிமைமூலம் இன்று நாட்டுகின்ற நல்ல அரசியல் விதைகள்தான் நாளை எமது தலைமுறையினைக் காத்து நிற்கும் விருட்ஷமாக வளர்ந்து நிழல் கொடுக்கும் என்பதைப் புறிந்துகொள்ளவேண்டும்.

இடையிடையே தமது அரசியல் இலாபத்திற்காக போலியாக தம்மை புகழ்ந்து உறவுகொண்டாடி  அவ்வப்போது வந்துபோகின்ற அரசியல்வாதிகளை நாம் அறிந்துவைத்திருக்கவேண்டும். மக்களாகிய நாம் விழிப்படைந்தால் மட்டுமே சிறந்த அரசியல்வாதிகளை எமதூரில் உருவாக்கமுடியும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டு செயலாற்றவேண்டும்.

எனவே, பொறாமைகள், வன்முறைகள் அற்ற வகையில் தமது உரிமைகளைக்கொண்டு பொருத்தமானவரை தெரிவுசெய்வது எமது சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் நாம் செய்யவேண்டிய கடமை என்பதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

-நன்றி-