Monday 1 February 2016

67 சுதந்திர தினங்கள் முடிந்தும் உறுதிப்படுத்தப்படாத சுதந்திரம்!


எதிர்வருகின்ற 2016.02.04 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில்(பெரும்பாலும்) இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடவிருக்கின்ற இவ்வேளையில் இதுவரை காலமும் பல்வேறு இனத்தவர்களைக் கொண்ட எமது இலங்கை மக்களிடையே உண்மையான சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளதா என்பதே இன்றைய கேள்விக்குறியாக இருந்துவருகின்றது.

பல்லின மக்கள் வாழ்கின்ற நமது இலங்கைத் தீவிலே ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தாமலும் நாட்டில் எந்தவொரு இடத்திலேயும் எந்நேரத்திலும் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் அரசியல் தலையீடுகளின்றியும் தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவகையிலும் ஆட்சியும் அதிகாரமும் அனைவருக்கும் சமமாகவும், சட்டமும் ஒழுங்கும் பொதுவானதாகவும், சலுகைகள் அனைத்தினத்தவருக்கும் சமமானதாகவும் வழங்கப்படுகின்றபோதுதான் அங்கே மக்களின் உண்மையான சுதந்திரம் உறுதிசெய்யப்படுகின்றது.

2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக்கொண்ட எமது தாய்த்தேசத்தில் 133வருட வெள்ளையர்களின் பிடியிலிருந்து விடுபட்டு 1948ல் சுதந்திரம் என்ற பெயர் பெற்று 1972ல் குடியரசான எமது தாய்நாட்டில் 1983 கறுப்பு ஜுலையுடன் ஆரம்பமாகிய  இன அடக்குமுறைக்கு எதிராக உருவான ஆயுதப்போராட்டம்  30வருடங்களின் பின்னர் ஸ்த்தம்பிதம் அடைந்தமையும் அதன் பின்னர் மக்கள் பகிரங்கமான அரசியல் அடக்குமுறைக்கு உள்வாங்கப்பட்டு பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகின்றமையையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

1948 முதல் கடந்த 2015 பெப்ரவரி 4ஆம் திகதி வரை நடைபெற்றிருந்த 67 சுதந்திரதின நிகழ்வுகளும் இலங்கை, வெள்ளையர்களிடமிருந்து விடுபட்ட நாளினையே நினைவு கூறுகின்ற ஒரு தினமாகவே அமைந்திருக்கின்றதே தவிற அவை மக்களுக்கான உண்மையான சுதந்திரத்தை வெளிப்படுத்திய தினமல்ல என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அத்தோடு, யுத்தவெற்றியின் பின்னரே சிறுபான்மையினர் அரசியல்ரீதியாக அதிகமான அடக்குமுறைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதுடன், காணிகளும், உடமைகளும் சுவீகரிக்கப்பட்டமையும் அவ்வடக்குமுறைகளில் இலங்கையரசு நேரடியாகத் தொடர்புபடாமல் வேறு சில அமைப்புக்களின் மூலமாகவே செயற்பட்டதையும் அறியாமலில்லை.

கடந்தகால ஆட்சியில், இலங்கையின் சட்டமும் ஒழுங்கும் அதிகமாகப் பிரையோகிக்கப்பட்டது சிறுபான்மையினர் மீதுதான் என்பதுடன் தெளிவான ஆதாரங்களுடன் பகிரங்கமாக வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் அரசின் சலுகைகளை நன்கு அனுபவித்துக்கொண்டனர் என்பதே யதார்த்தம். வெவ்வேறு துறைகளில் படித்துப்பட்டம் பெற்ற எத்தனையோ பட்டதாரிகள் இருக்கும்போது திறமைகள் புறந்தள்ளப்பட்டு அரசியலதிகாரமும், பணப்புலக்கமும் கொண்ட அறிவு, திறன், மனப்பாங்கில் தகுதியற்றவர்களே இன்று அதிகமான வேலைத்தளங்களில் நுழைந்து கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தி சீரழித்துச் செல்கின்றனர்.

எதிர்வருகின்ற 68வது சுதந்திரதினமாவது தனிமனித பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு எம் தேசமக்களின் வாழ்விற்கான விடியலை ஏற்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மக்களுக்கான 1வது சுதந்திர தினமாகவும்,  அரசியல் தலையீடுகளற்று திறமைகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற வகையிலும், கல்வி, விளையாட்டு, மருத்துவம் போன்ற அனைத்துத்துறைகளிலும் திறமையுள்ள மக்கள் சுதந்திரமாகப் பங்குப்பற்றக்கூடிய வகையிலும், இன வன்முறைகளைத் தோற்றுவிக்காமலும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்களுக்குப் பங்கம் ஏற்படாததாகவும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கொண்டதாகவும் அமையவேண்டுமென்பதே எமது அவா.

-நன்றி-

0 comments:

Post a Comment