Saturday 25 June 2016

அரசியல் நாடகத்தால் பாதிக்கப்படுவது மக்களே!

ஆட்சியும் அதிகாரமும் ஒருவரிடம் நிரந்தரமாக தங்கிவிடுவதில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அதிகாரம் இழந்தபின்னும் சமூகத்தால் போற்றப்படுவர்.... ஆனால் தம்மிடம் ஆட்சியும் அதிகாரமும் இருக்கின்றபோது சமூகத்தைப்புறந்தள்ளி தமது சுயவிருப்பில் இலாபம் காணமுயற்சித்தால் அவர்கள் ஆட்சியதிகாரம் இழந்தபின்னர் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.... இதுவே நியதி.... 

இன்று, தம்மிடம் அதிகாரம் இருக்கின்றபோது சமூகத்தைச் சிந்தியாதவர்கள் எல்லோரும் அவர்களின் அதிகாரம் இழந்தபின்னர் சமூகத்திற்காக குரல் கொடுப்பதாக பம்மாத்துக் காட்டுகின்றனர்.... இதுவே இன்றைய சில நவீன ஆட்சியாளர்களின் இழி நிலையாகும். 

அதிகாரத்தில் இருப்போர் தமது வோட்டு வங்கிகளை நிரப்புவதற்காக ஒரு பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு இருக்கின்றபோதும் அவர்கள் தற்காலிக தீர்வினையே செயற்படுத்திச் செல்கின்றனர். காரணம் அடுத்தடுத்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைதோன்றவேண்டும் தற்காலிக தீர்வுகளையே முன்னெடுக்கவேண்டும் நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தால் எதிர்காலத்தில் தாம் எதைச்சொல்லி வோட்டுக்கேட்பது...... போன்ற  பல்வேறு விடையங்களைச் சிந்திக்கின்றனர்....

இவர்கள் மக்களைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக தமது ஆட்சியையும் அதிகாரத்தையும் எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றனர். இவ்வாறான சம்பவம்தான் எமது கோணாவத்தைக் கிராமத்திலும் தொடர்கிறது.

நான் அறிந்தவகையில், 2004ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த சுனாமிக்கு மறுநாள் ஏற்பட்ட மழையினால் எமது கடற்கரையை அண்டிய கோணாவத்தைக் கிராமத்திலும் வெள்ளம் ஊற்றெடுத்தது. அதன்பின்னர் ஏற்படுகின்ற ஒவ்வொரு மழைக்கும் எமது கிராமத்தில் வெள்ளம் வருவதும் மக்கள் இடம்பெயர்வதும் வீதிகளும் சொத்துக்களும் சேதமாவதும் போன்ற பிரச்சினையே நிகழ்கின்றனர். 

இந்த வெள்ள அனர்த்தம் அதிக பாதிப்போடு வருவதற்கு முக்கிய காரணம் வீதியோரங்களில் வடிகாண்கள் இல்லாமையே. நீர் வடிந்தோடுவதற்கு இடமின்றி வீடுகளுக்குள்ளும் பாதையிலும் நிரந்தரமாகத் தேங்கி விடுகின்றன.  இதனால் சொத்துக்களும் பாதைகளும் சேதமாகின்றன. 
சேதமாகிய பாதைகளை திருத்தவேண்டுமென்று பலநாட்கள் நடையாக நடந்தபின்னர் பாதைகளுக்கு கிரவல் இடப்படும். கிரவல் இட்டு ஓரிரு மாதங்களில் அடுத்த வெள்ளம் வந்துவிடும் பின்னர் இதே சேதம்..... இதே நடை...... இவ்வாறு நிரந்தரமற்ற தீர்வுகளால் ஒவ்வொரு வருடமும் இதே நிலைதான் தொடர்கின்றன.



கடந்த காலத்தில் இந்நிலைபற்றி சிந்தித்து இதற்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டுமென்ற நோக்கோடு எமது கிராமத்தில் அலையோடும் வலையோடும் போராடி கஸ்ட்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கின்ற எமது கிராமத்தின் தலைமகன் முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் முயற்சியினால் தன்னால் முடிந்தவரை ஓரிரு வீதிகளுக்கு வடிகாண்கள் கட்டப்பட்டன. 

அத்தோடு எமது கிராமத்தின் நலன்விரும்பிகள் சிலரினால் வடிகாண் ஒன்றும் (நூலகத்திற்கு முன்னால்) அமைக்கப்பட்டது  முடிந்தவரை முயற்சிசெய்தனர் ஆயினும் முற்றுப்பெறவில்லை. 

எனினும்

இவ்வடிகாண் விடையத்திலாவது எமது அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி மற்றும் கட்சிக்குள்ளே பேதமின்றி ஒன்றுபட்டு சமூகத்திற்குச் செய்யவேண்டிய தொண்டு என்று எண்ணி எதிர்காலத்தில் மக்களுக்கு ஏற்படவிருக்கின்ற வெள்ள அனர்த்தத்தின் சேதங்களை வெகுவாக குறைப்பதற்கான தீர்வாக இவ்வடிகாண்களை செப்பனிட்டு மக்களின் வாழ்வை வளமாக்குதவற்கு செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்....

நன்றியுடன்
-நான்-
வெள்ளம் வருமுன்பே அணை கட்ட வேண்டும்.

0 comments:

Post a Comment