Saturday 23 December 2017

அறபா வட்டாரமும், வாக்காளர் நிலையும்.....


எதிர்வருகின்ற 2018ஆம் வருடம்  உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதில் அட்டாளைச்சேனையின் வட்டாரங்களில் அதிகம் போட்டிமிக்க வட்டாரமாகவும், அதிகமாக பேசப்படும் வட்டாரமாகவும் அறபா வட்டாரம் திகழ்கிறது. (இது அட்டாளைச்சேனையின்  1 , 8 , 10 ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியது.)

இப்போட்டிமிக்க சூழ்நிலைக்கு முக்கிய காரணம், அங்கே தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்ற மூன்று கட்சி வேட்பாளர்களே!! அதிலும் குறிப்பாக தமீம் ஆப்தீன், அப்துல் முனாப் ஆகியோர் கடந்தகாலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு பல சேவைகளை செய்தவர்கள். மூன்றாமவர் தேசிய காங்கிரஸில் புதிதாக போட்டியிடுகின்ற திருமதி ஹமீட் அவர்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னால் பிரதேசசபை உறுப்பினராக இருந்த திரு. அப்துல் முனாப் (All D ) அவர்கள் தற்போது “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலே” மயில் சின்னத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஆரம்பகால போராளியான தமீம் ஆப்தீன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வகுத்துள்ள யானை சின்னத்திலே போட்டியிடுகின்றார்.



இவ் அறபா வட்டாரத்தைப் பொருத்தவரை SLMC மீது விரக்தி கொண்டவர்கள் UPA வேட்பாளருடனும், SLMC & UPA மீது எதிர்ப்பு கொண்டவர்கள் NC யுடனும் இணைந்திருக்கின்றபோதும் SLMC யின் ஆரம்ப போராளிகளும், குறித்த வேட்பாளர்மீது அதீத அன்பு கொண்டவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸிலேயே நிலைத்திருக்கின்றனர். ஆயினும் இன்னும் சிலர் கட்சிகளின் மீதும் வேட்பாளர்கள் மீதும் விரக்தி கொண்டு தேர்தலை புறக்கணிக்க  தயாராகவுள்ளனர்.

இவ் அறபா வட்டாரத்தின் தற்போதைய கள நிலவரங்களைப் பார்த்தால்.....

SLMC   45  வீதமான ஆதரவும்

UPA      30   வீதமான ஆதரவும்

NC      15  வீதமான ஆதரவும்

Other 10 வீதமானோர் எந்தக்கட்சியும் வேண்டாம் என்ற விரக்தி நிலையிலும் உள்ளனர்.

இத் தேர்தலைப் பொருத்தவரை பெண்களும் முன்னுரிமைப் படுத்தப்படுவதனால் தே.கா. வேட்பாளர் தெரிவுசெய்யப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

எதிர்வருகின்ற நாட்களில் இக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்தினாலும் அவர்கள் வாக்காளர்களோடு நடந்துகொள்கின்ற முறையினாலும், சமூகத்திற்கு செய்கின்ற சேவையினாலும் இவ் ஆதரவு நிலை மாற்றமடையலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.......

- நான் பொதுவானவன் -


Sunday 17 December 2017

வெட்டப்படுகின்ற விழுதுகள்....

தேர்தல் வந்துவிட்டாலே வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் பின்னர் திக்குமுக்காடுவதுமே பல அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது......  



பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வியர்வையில் சம்மாந்துறையின் தொழுவத்தினுள்ளே SLMCயின் விதையிடப்பட்டு.... காத்தான்குடியிலே துளிர்விட்டு......  கல்முனையிலே விருட்ஷமாகி......  சாய்ந்தமருது தொடக்கம் பொத்துவிலையும் தாண்டி விழுதுகள் பரப்பி.....  பல பிரதேசங்களுக்கு நிழல்கொடுத்து...... வீரத்தோடு தமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் கட்சி..... 

இன்றறைய SLMCயின் தலைமையில்..... விழுதுகள் பல வெட்டப்பட்டு......  கிளைகள் பல ஒடிக்கப்பட்டு.....  துளிர்கள் எல்லாம் கிள்ளியெறியப்பட்டு..... மரம் மட்டும் சக்தியற்ற ஒருசில கிளைகளுடன் தனியே நிற்கிறது..... இதுதான்  இன்றைய தலைமையின் சாணக்கியம்!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் SLMC தலைவரின் வேண்டுகோளை அட்டாளைச்சேனை மக்கள் செவ்வனே நிறைவேற்றியதன் பரிசு இன்றைய ஏமாற்றம்!! வழமையாக மக்கள் அரசியல்வாதிகளிடம் ஏமாறுவதும் பின்னர் பின்னால் செல்வதும் வழக்கமாகிவிட்டதை நன்கு அறிந்துகொண்ட அரசியல்கட்சி தலைமைகள் இன்று ஊரையே ஏமாற்றும் படலங்களை ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் வேதனை....

தமது 5 வருட ஆட்சிக்காலத்தில் 4 வருடங்களுக்கு மேலாக மக்கள் எதற்காக தங்களை தேர்தெடுத்தார்கள் என்ற நோக்கத்தை மறந்து...... சேவைகளை மறந்திருந்து..... சுகபோக வாழ்வில் களிப்படைந்து.... இறுதிக்கட்ட சில மாதங்கள் மட்டும் ஆங்காங்கே கண்துடைப்புக்காக ஒருசில வேலைகளைச் செய்துவிட்டு அடுத்த தேர்தலுக்கு தயாராகின்றனர்.... இதுதான் இன்றைய ஒருசில கட்சிகளின் நிலையும்...... அரசியல்வாதிகளின் நிலையும்.....  மக்களின் அவலமும்......


இதனை மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்!!

எமது ஊரைப் பொருத்தளவில்......
காலங்கடந்தபின்பு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதால் மக்களுக்கு எந்தவிதமான பலனுமில்லை என்பதை அறிந்திருக்கின்ற தலைமை இத்தனை காலமும் இழுத்தடிப்பிலேயே காலத்தை நகர்த்திச் செல்கின்றது..... 
இதுதான் சாணக்கியமா?

ஆனால்.....

தேசியப்பட்டியல் தருவதாக எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்காமல் தேர்தல் கேட்டு தோற்றுப்போன நபருக்கு தே.பட்டியல் கொடுத்திருக்கின்ற தலைமை...... அரசியல் அநாதையாக்கப்பட்ட எமது ஊரிலே உறுதிமொழி வழங்கி இன்றுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கட்சிக்கும் தலைமைக்கும் கேவலம்!! 



எனவே....
கட்சிக்காக மக்கள் அல்ல! மக்களுக்காகவே கட்சி!! என்பதனை ஒவ்வொரு கட்சித்தலைவரும் உணர்ந்து செயற்படவேண்டும்!!


- நான் பொதுவானவன் -

Wednesday 23 August 2017

தகவல் அறியும் சட்டமும் எமது கிராமமும்


எமது கிராமத்தைப்பொறுத்தளவில் சிலர் தத்தமது சுயநலனுக்காக மக்களைக் காண்பித்து வயிறுவளர்க்கும் நோக்கில் தாமாகவே ஏதோ ஒரு வகையில் சங்கங்களையும், விளையாட்டுக்கழகங்களையும் பதிவுசெய்துவிட்டு அதற்கு தலைவராக அமர்ந்துகொண்டு கிடைக்கின்ற நன்கொடைகளால்  சுகபோக வாழ்க்கையில் ஈடுபகின்றனர். 

இவர்களின் சோம்பேரித் தனங்களையும், கள்ளத்தனத்தையும் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டவும், உண்மையான தகவல்கள் சரியானமுறையில் சமூக அங்கத்தவர்களுக்கு சென்றடையவேண்டுமென்ற நோக்கிலும் இவ்வாறான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டமை எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரமாகும்.

எவ்வாறு தகவல்களை அறிவதென்றால்.....

கீழே காணப்படுகின்ற “கிளிக்” எனும் லிங்கை கிளிக் செய்வதனூடாக குறித்த படிவத்தை பெற்று அதனை சரிவர நிறப்பியபின்னர் அப்படிவத்தை “பிரதேச செயலாளருக்கு”  பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவேண்டும். அதன்பின்னர் உங்களது படிவம் சென்றடைந்தமைக்கான பதில் 14 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு கிடைக்கவேண்டும். அடுத்து வருகின்ற 14 வேலை நாட்களுக்குள் உங்களது கேள்விளுக்கான தகவல்களை குறித்த பகுதியினர் அனுப்பிவைக்கவேண்டும். எல்லாமாக 28 வேலை நாட்களுக்குள் உங்களின் படிவத்துக்கான முழுத் தகவல்களும் கிடைக்கவேண்டும். இதுவே முறை.


மேலதிக தகவல்.....

இலங்கையைப் பெறுத்தவரை 1996ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் கோரிக்கையானது 2001ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. அதன்பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்துவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பான கவனம் ஏற்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச்/ஜுன் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து சட்டமாக உருவாக்கினார். பின்னர், இச்சட்டமானது முழுமையாக கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




விண்ணப்ப படிவத்துக்கு இங்கே கிளிக் செய்க!


மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்க!

மேலதிக தகவல்

கசடறக் கற்க!

Wednesday 16 August 2017

சமுர்த்தியும் செல்வந்த ஏழைகளும்....

இன்று எமது கிராமத்திலே வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமூர்த்திக் கொடுப்பனவுகளை அவ் ஏழைகள் அனுபவிப்பதைவிட செல்வந்தர்களும், செல்வாக்கு உள்ளவர்களும், காக்கா பிடிப்பவர்களுமே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை!!

இவ்வாறு இலங்கை முழுவதுமே அலசிப்பார்த்தால் வசதிபடைத்த ஏழைகள்தான் அதிகமாக இதனை அனுபவிக்கின்றனர்... இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலேயே அரசாங்கம் இத்திட்டத்தினை சட்டத்தின் வரையறைக்குள் முழுமையாக கொண்டுவர முனைந்து பல தகவல்கள் அடங்கிய விதிமுறைக்கோவை ஒன்றைத் தயாரித்து நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இது பல வழிகளில் சாதகமாக இருந்தாலும் சில அப்பாவி மக்களும் பாதிப்படைகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருந்து பொருத்தமான மக்களுக்கே இச் சமுர்த்திக் கொடுப்பனவுகளைக் கொடுக்கவேண்டும். இதில் பாரபட்சம் காட்டாது தமக்குத் தெரிந்தவர்கள், செல்வாக்குள்ளவர்கள் என்று பாராது ஏழைகளின் சொத்துக்களை அவர்களுக்கே சென்றடையுமாறு தமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது சாலச் சிறந்தது.

இன்னும் சிறிது நாட்களில் எமது ஊரில் யார் யாருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்ற தகவல்களையும் இந்த இணையத்தளத்தில் பதிவிட முனைகின்றேன்......(தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில்)

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்திக் கொடுப்பனவு சம்மந்தமாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அடங்கிய சட்டக்கோவை












நன்றி

Tuesday 13 September 2016

முகமூடி அரசியலும் சுதந்திர பேச்சுக்களும்


கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அவர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு அதனுள் பன்றி இறைச்சி வீசப்பட்டு ஹபாயாக்கள் கேவலப்படுத்தப்பட்டு முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் தீயிடப்பட்டு அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு  நோன்புகாலங்களின் இறை வணக்கங்களை மேற்கொள்ளாது தடுக்க ”கிறீஸ் மனிதன்” உருவாக்கப்பட்டு இனத்துவேசத்தை உருவாக்க பொதுபலசேனா உருவாக்கப்பட்டு “சிங்க ளே” எனும் நாமங்கள் உச்சரிக்கப்பட்டு.........இப்படி எத்தையோ அநியாயங்கள் முஸ்லிம்களின்மேல் தினிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது....... எங்கே போய்விட்டது உங்களின் சமூக உணர்வு! சமூக அக்கறை!! சமூக சிந்தனை!!! தன் சமூக சுதந்திரம்!!! மக்களின் எழுச்சி!!!
அவ் ஆளும்கட்சியிலே தனது சமூகத்தைப்பற்றிய அக்கறையின்றி சிலைபோல் வாய்பேசாமல் சுயநலத்திற்காக குந்தியிருந்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பங்கம்விளைவித்த அத்தலைமைத்துவத்தையே மீண்டும் கொண்டுவருவதற்கு இறுதிவரை கடும்முயற்சி செய்துகொண்டிந்தவர்கள் இன்று கிழக்கு முஸ்லிம்களின் எழுச்சிபற்றிப் பேசுவதும் கிழக்கின் சுதந்திரம்பற்றிப் பேசுவதும்தான் வேடிக்கையாக உள்ளது!!

இப்படியாக கடந்த ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் தீவிரமடைகின்றபோது ACMC  மற்றும் SLMC போன்ற மக்கள் நலக் கட்சிகள் அவ்வரசிடமிருந்து சமூகவிடுதலைக்காக பிரிந்தபோதும் இன்னும் சில மக்களின் பிரதிநிதிகள் தன் சமூக விடுதலையைக் கவனியாது சுயநல அரசியலுக்காகவே காத்திருந்ததையும் நாம்  அறியாமலில்லை!!

ஆட்சியும் அதிகாரமும் தம்மிடமிருக்கின்றபோது மக்களின் துயர் துடைக்க முன்வராதவர்கள் இன்று மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து மக்களின் எண்ணங்களை திசைதிருப்ப எத்தனிக்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளைவிட மக்கள் அரசியலில் அதீதி அனுபவம் கொண்டிருப்பதை சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.....

ஆனாலும் அறுந்துவிட்ட பல்லியின் வால்கள் துடிப்பது இயல்பே..... அதுபோல்தான் கடந்த ஆட்சியில் சுயநலத்தில் சுகபோகங்களை அனுபவித்த சிலரின் நிலமைகளும்...... 

மக்களுக்காகவே அரசும் அதன் பிரதிநிதிகளும் எனவே மக்களின் நலனில் ்அக்கறைகொண்ட அரசியல்வாதிகளை நாம் போற்றுகின்றோம். மாற்றமானவர்களை மக்களுக்காக சிந்திக்குமாறு தூண்டுகின்றோம்.

- நன்றி -

Saturday 25 June 2016

அரசியல் நாடகத்தால் பாதிக்கப்படுவது மக்களே!

ஆட்சியும் அதிகாரமும் ஒருவரிடம் நிரந்தரமாக தங்கிவிடுவதில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அதிகாரம் இழந்தபின்னும் சமூகத்தால் போற்றப்படுவர்.... ஆனால் தம்மிடம் ஆட்சியும் அதிகாரமும் இருக்கின்றபோது சமூகத்தைப்புறந்தள்ளி தமது சுயவிருப்பில் இலாபம் காணமுயற்சித்தால் அவர்கள் ஆட்சியதிகாரம் இழந்தபின்னர் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.... இதுவே நியதி.... 

இன்று, தம்மிடம் அதிகாரம் இருக்கின்றபோது சமூகத்தைச் சிந்தியாதவர்கள் எல்லோரும் அவர்களின் அதிகாரம் இழந்தபின்னர் சமூகத்திற்காக குரல் கொடுப்பதாக பம்மாத்துக் காட்டுகின்றனர்.... இதுவே இன்றைய சில நவீன ஆட்சியாளர்களின் இழி நிலையாகும். 

அதிகாரத்தில் இருப்போர் தமது வோட்டு வங்கிகளை நிரப்புவதற்காக ஒரு பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு இருக்கின்றபோதும் அவர்கள் தற்காலிக தீர்வினையே செயற்படுத்திச் செல்கின்றனர். காரணம் அடுத்தடுத்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைதோன்றவேண்டும் தற்காலிக தீர்வுகளையே முன்னெடுக்கவேண்டும் நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தால் எதிர்காலத்தில் தாம் எதைச்சொல்லி வோட்டுக்கேட்பது...... போன்ற  பல்வேறு விடையங்களைச் சிந்திக்கின்றனர்....

இவர்கள் மக்களைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக தமது ஆட்சியையும் அதிகாரத்தையும் எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றனர். இவ்வாறான சம்பவம்தான் எமது கோணாவத்தைக் கிராமத்திலும் தொடர்கிறது.

நான் அறிந்தவகையில், 2004ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த சுனாமிக்கு மறுநாள் ஏற்பட்ட மழையினால் எமது கடற்கரையை அண்டிய கோணாவத்தைக் கிராமத்திலும் வெள்ளம் ஊற்றெடுத்தது. அதன்பின்னர் ஏற்படுகின்ற ஒவ்வொரு மழைக்கும் எமது கிராமத்தில் வெள்ளம் வருவதும் மக்கள் இடம்பெயர்வதும் வீதிகளும் சொத்துக்களும் சேதமாவதும் போன்ற பிரச்சினையே நிகழ்கின்றனர். 

இந்த வெள்ள அனர்த்தம் அதிக பாதிப்போடு வருவதற்கு முக்கிய காரணம் வீதியோரங்களில் வடிகாண்கள் இல்லாமையே. நீர் வடிந்தோடுவதற்கு இடமின்றி வீடுகளுக்குள்ளும் பாதையிலும் நிரந்தரமாகத் தேங்கி விடுகின்றன.  இதனால் சொத்துக்களும் பாதைகளும் சேதமாகின்றன. 
சேதமாகிய பாதைகளை திருத்தவேண்டுமென்று பலநாட்கள் நடையாக நடந்தபின்னர் பாதைகளுக்கு கிரவல் இடப்படும். கிரவல் இட்டு ஓரிரு மாதங்களில் அடுத்த வெள்ளம் வந்துவிடும் பின்னர் இதே சேதம்..... இதே நடை...... இவ்வாறு நிரந்தரமற்ற தீர்வுகளால் ஒவ்வொரு வருடமும் இதே நிலைதான் தொடர்கின்றன.



கடந்த காலத்தில் இந்நிலைபற்றி சிந்தித்து இதற்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டுமென்ற நோக்கோடு எமது கிராமத்தில் அலையோடும் வலையோடும் போராடி கஸ்ட்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கின்ற எமது கிராமத்தின் தலைமகன் முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் முயற்சியினால் தன்னால் முடிந்தவரை ஓரிரு வீதிகளுக்கு வடிகாண்கள் கட்டப்பட்டன. 

அத்தோடு எமது கிராமத்தின் நலன்விரும்பிகள் சிலரினால் வடிகாண் ஒன்றும் (நூலகத்திற்கு முன்னால்) அமைக்கப்பட்டது  முடிந்தவரை முயற்சிசெய்தனர் ஆயினும் முற்றுப்பெறவில்லை. 

எனினும்

இவ்வடிகாண் விடையத்திலாவது எமது அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி மற்றும் கட்சிக்குள்ளே பேதமின்றி ஒன்றுபட்டு சமூகத்திற்குச் செய்யவேண்டிய தொண்டு என்று எண்ணி எதிர்காலத்தில் மக்களுக்கு ஏற்படவிருக்கின்ற வெள்ள அனர்த்தத்தின் சேதங்களை வெகுவாக குறைப்பதற்கான தீர்வாக இவ்வடிகாண்களை செப்பனிட்டு மக்களின் வாழ்வை வளமாக்குதவற்கு செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்....

நன்றியுடன்
-நான்-
வெள்ளம் வருமுன்பே அணை கட்ட வேண்டும்.

Saturday 28 May 2016

கடற்படைச் சிப்பாயை இடம்மாற்றியது முழுமையான தீர்வல்ல!



எமது நாடு மாகாணங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவ்வதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் ஒப்புதலின் அடிப்படையிலேயே பிரையோகிக்கப்படுகின்றன. 

குறிப்பாக, மாகாண முதல்வர் (முதலமைச்சர்)  மக்களினால் தெரிவுசெய்யப்பட்டாலும் அம்முதல்வரின் செயற்பாடுகளுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குகின்ற அதிகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுணருக்கே உள்ளது என்பதுடன் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படுகின்ற ஆளுணரானவர் மக்களின் சேவையில் கவனக்குறைவாக இருந்தாலும் அவருக்கு எந்தப்பாதிப்புமில்லை. மக்களைப்பற்றிய சிந்தனையைவிட ஜனாதிபதிக்கு சேவை செய்வதே இவர்களின் நோக்கமாக இருக்கும். கடந்த ஆட்சியிலும் இதுவே நடந்தது! இது எமது நாட்டு ஜனாநாயகத்தில் உள்ள பெரும் குறையாகும்!

இன்றைய காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர் பதவி என்பது வெறும் பெயரளவில் மாகாணத்தை நிருவகிக்கின்ற ஒரு கௌரவ அமைச்சாகவே காணப்பட்டு வருகின்றது. மாகாண செயற்பாடுகள் அனைத்தும் ஆளுணரின் அதிகாரத்தின் கீழேயே செயற்படுவது மக்களின் இறைமைக்குப் புறம்பான செயலாகும்!  இவ்வாறு மாகாணத்தின் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுணரின் காலடியில் குவிந்துகிடக்கின்றபோது...... எப்பெயர்ப்பட்ட மக்களின் நலனை விரும்புகின்ற சேவைத்திலகமாக இருக்கின்ற முதலமைச்சர்கள் வந்தாலும் தமது சேவைகளை திறண்பட செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது!

இவ்வாறான செயற்பாடுகளின்மூலமே முதலமைச்சரினால் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை காரணமாக முதலமைச்சர் - ஆளுணர் ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு அற்ற தன்மை காணப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மக்களுக்கான அபிவிருத்திகளும், மாகாண செயற்பாடுகளும் தரம் குன்றிக்காணப்படுதவற்கு இதுவே முதன்மைக்காரணமாகும். ஆளுணரின் பொடுபோக்கானதும் மதியாமை எனும் தன்மையினாலுமே கடற்படை சிப்பாயினால் கிழக்கின் முதலமைச்சர் அவமதிக்கப்பட்டதும் - கிழக்கின் முதலமைச்சரினால் கடற்படைச்சிப்பாய் அவமதிக்கப்பட்டதுக்குமான காரணமாகும்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் ஆளுணரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவ்வதிகாரங்கள் முழுமையாக மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகின்றபோதுதான் மாகாணத்தின் சேவைகள் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்பதே யதார்த்தம்!

ஒரு பிரச்சினைக்கான அடிப்படைக்காரணத்தை சரி செய்யாமல் தற்காலிகமாகப் பிரச்சினையின் ஆரம்பத்தை மட்டும் கிள்ளிவிடுவதனால் ஓய்ந்துவிடாது. கடற்படைச் சிப்பாய் இடம் மாற்றப்பட்டது இப்பிரச்சினைக்கான முழுத் தீர்வல்ல! ஆளுணரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு கிழக்கின் முதலமைச்சரிடம் கொடுப்பதே முழுமையான தீர்வாகும்!!

நன்றி