Saturday 23 December 2017

அறபா வட்டாரமும், வாக்காளர் நிலையும்.....


எதிர்வருகின்ற 2018ஆம் வருடம்  உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதில் அட்டாளைச்சேனையின் வட்டாரங்களில் அதிகம் போட்டிமிக்க வட்டாரமாகவும், அதிகமாக பேசப்படும் வட்டாரமாகவும் அறபா வட்டாரம் திகழ்கிறது. (இது அட்டாளைச்சேனையின்  1 , 8 , 10 ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியது.)

இப்போட்டிமிக்க சூழ்நிலைக்கு முக்கிய காரணம், அங்கே தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்ற மூன்று கட்சி வேட்பாளர்களே!! அதிலும் குறிப்பாக தமீம் ஆப்தீன், அப்துல் முனாப் ஆகியோர் கடந்தகாலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு பல சேவைகளை செய்தவர்கள். மூன்றாமவர் தேசிய காங்கிரஸில் புதிதாக போட்டியிடுகின்ற திருமதி ஹமீட் அவர்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னால் பிரதேசசபை உறுப்பினராக இருந்த திரு. அப்துல் முனாப் (All D ) அவர்கள் தற்போது “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலே” மயில் சின்னத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஆரம்பகால போராளியான தமீம் ஆப்தீன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வகுத்துள்ள யானை சின்னத்திலே போட்டியிடுகின்றார்.



இவ் அறபா வட்டாரத்தைப் பொருத்தவரை SLMC மீது விரக்தி கொண்டவர்கள் UPA வேட்பாளருடனும், SLMC & UPA மீது எதிர்ப்பு கொண்டவர்கள் NC யுடனும் இணைந்திருக்கின்றபோதும் SLMC யின் ஆரம்ப போராளிகளும், குறித்த வேட்பாளர்மீது அதீத அன்பு கொண்டவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸிலேயே நிலைத்திருக்கின்றனர். ஆயினும் இன்னும் சிலர் கட்சிகளின் மீதும் வேட்பாளர்கள் மீதும் விரக்தி கொண்டு தேர்தலை புறக்கணிக்க  தயாராகவுள்ளனர்.

இவ் அறபா வட்டாரத்தின் தற்போதைய கள நிலவரங்களைப் பார்த்தால்.....

SLMC   45  வீதமான ஆதரவும்

UPA      30   வீதமான ஆதரவும்

NC      15  வீதமான ஆதரவும்

Other 10 வீதமானோர் எந்தக்கட்சியும் வேண்டாம் என்ற விரக்தி நிலையிலும் உள்ளனர்.

இத் தேர்தலைப் பொருத்தவரை பெண்களும் முன்னுரிமைப் படுத்தப்படுவதனால் தே.கா. வேட்பாளர் தெரிவுசெய்யப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

எதிர்வருகின்ற நாட்களில் இக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்தினாலும் அவர்கள் வாக்காளர்களோடு நடந்துகொள்கின்ற முறையினாலும், சமூகத்திற்கு செய்கின்ற சேவையினாலும் இவ் ஆதரவு நிலை மாற்றமடையலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.......

- நான் பொதுவானவன் -


Sunday 17 December 2017

வெட்டப்படுகின்ற விழுதுகள்....

தேர்தல் வந்துவிட்டாலே வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் பின்னர் திக்குமுக்காடுவதுமே பல அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது......  



பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வியர்வையில் சம்மாந்துறையின் தொழுவத்தினுள்ளே SLMCயின் விதையிடப்பட்டு.... காத்தான்குடியிலே துளிர்விட்டு......  கல்முனையிலே விருட்ஷமாகி......  சாய்ந்தமருது தொடக்கம் பொத்துவிலையும் தாண்டி விழுதுகள் பரப்பி.....  பல பிரதேசங்களுக்கு நிழல்கொடுத்து...... வீரத்தோடு தமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் கட்சி..... 

இன்றறைய SLMCயின் தலைமையில்..... விழுதுகள் பல வெட்டப்பட்டு......  கிளைகள் பல ஒடிக்கப்பட்டு.....  துளிர்கள் எல்லாம் கிள்ளியெறியப்பட்டு..... மரம் மட்டும் சக்தியற்ற ஒருசில கிளைகளுடன் தனியே நிற்கிறது..... இதுதான்  இன்றைய தலைமையின் சாணக்கியம்!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் SLMC தலைவரின் வேண்டுகோளை அட்டாளைச்சேனை மக்கள் செவ்வனே நிறைவேற்றியதன் பரிசு இன்றைய ஏமாற்றம்!! வழமையாக மக்கள் அரசியல்வாதிகளிடம் ஏமாறுவதும் பின்னர் பின்னால் செல்வதும் வழக்கமாகிவிட்டதை நன்கு அறிந்துகொண்ட அரசியல்கட்சி தலைமைகள் இன்று ஊரையே ஏமாற்றும் படலங்களை ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் வேதனை....

தமது 5 வருட ஆட்சிக்காலத்தில் 4 வருடங்களுக்கு மேலாக மக்கள் எதற்காக தங்களை தேர்தெடுத்தார்கள் என்ற நோக்கத்தை மறந்து...... சேவைகளை மறந்திருந்து..... சுகபோக வாழ்வில் களிப்படைந்து.... இறுதிக்கட்ட சில மாதங்கள் மட்டும் ஆங்காங்கே கண்துடைப்புக்காக ஒருசில வேலைகளைச் செய்துவிட்டு அடுத்த தேர்தலுக்கு தயாராகின்றனர்.... இதுதான் இன்றைய ஒருசில கட்சிகளின் நிலையும்...... அரசியல்வாதிகளின் நிலையும்.....  மக்களின் அவலமும்......


இதனை மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்!!

எமது ஊரைப் பொருத்தளவில்......
காலங்கடந்தபின்பு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதால் மக்களுக்கு எந்தவிதமான பலனுமில்லை என்பதை அறிந்திருக்கின்ற தலைமை இத்தனை காலமும் இழுத்தடிப்பிலேயே காலத்தை நகர்த்திச் செல்கின்றது..... 
இதுதான் சாணக்கியமா?

ஆனால்.....

தேசியப்பட்டியல் தருவதாக எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்காமல் தேர்தல் கேட்டு தோற்றுப்போன நபருக்கு தே.பட்டியல் கொடுத்திருக்கின்ற தலைமை...... அரசியல் அநாதையாக்கப்பட்ட எமது ஊரிலே உறுதிமொழி வழங்கி இன்றுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கட்சிக்கும் தலைமைக்கும் கேவலம்!! 



எனவே....
கட்சிக்காக மக்கள் அல்ல! மக்களுக்காகவே கட்சி!! என்பதனை ஒவ்வொரு கட்சித்தலைவரும் உணர்ந்து செயற்படவேண்டும்!!


- நான் பொதுவானவன் -

Wednesday 23 August 2017

தகவல் அறியும் சட்டமும் எமது கிராமமும்


எமது கிராமத்தைப்பொறுத்தளவில் சிலர் தத்தமது சுயநலனுக்காக மக்களைக் காண்பித்து வயிறுவளர்க்கும் நோக்கில் தாமாகவே ஏதோ ஒரு வகையில் சங்கங்களையும், விளையாட்டுக்கழகங்களையும் பதிவுசெய்துவிட்டு அதற்கு தலைவராக அமர்ந்துகொண்டு கிடைக்கின்ற நன்கொடைகளால்  சுகபோக வாழ்க்கையில் ஈடுபகின்றனர். 

இவர்களின் சோம்பேரித் தனங்களையும், கள்ளத்தனத்தையும் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டவும், உண்மையான தகவல்கள் சரியானமுறையில் சமூக அங்கத்தவர்களுக்கு சென்றடையவேண்டுமென்ற நோக்கிலும் இவ்வாறான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டமை எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரமாகும்.

எவ்வாறு தகவல்களை அறிவதென்றால்.....

கீழே காணப்படுகின்ற “கிளிக்” எனும் லிங்கை கிளிக் செய்வதனூடாக குறித்த படிவத்தை பெற்று அதனை சரிவர நிறப்பியபின்னர் அப்படிவத்தை “பிரதேச செயலாளருக்கு”  பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவேண்டும். அதன்பின்னர் உங்களது படிவம் சென்றடைந்தமைக்கான பதில் 14 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு கிடைக்கவேண்டும். அடுத்து வருகின்ற 14 வேலை நாட்களுக்குள் உங்களது கேள்விளுக்கான தகவல்களை குறித்த பகுதியினர் அனுப்பிவைக்கவேண்டும். எல்லாமாக 28 வேலை நாட்களுக்குள் உங்களின் படிவத்துக்கான முழுத் தகவல்களும் கிடைக்கவேண்டும். இதுவே முறை.


மேலதிக தகவல்.....

இலங்கையைப் பெறுத்தவரை 1996ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் கோரிக்கையானது 2001ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. அதன்பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்துவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பான கவனம் ஏற்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச்/ஜுன் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து சட்டமாக உருவாக்கினார். பின்னர், இச்சட்டமானது முழுமையாக கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




விண்ணப்ப படிவத்துக்கு இங்கே கிளிக் செய்க!


மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்க!

மேலதிக தகவல்

கசடறக் கற்க!

Wednesday 16 August 2017

சமுர்த்தியும் செல்வந்த ஏழைகளும்....

இன்று எமது கிராமத்திலே வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமூர்த்திக் கொடுப்பனவுகளை அவ் ஏழைகள் அனுபவிப்பதைவிட செல்வந்தர்களும், செல்வாக்கு உள்ளவர்களும், காக்கா பிடிப்பவர்களுமே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை!!

இவ்வாறு இலங்கை முழுவதுமே அலசிப்பார்த்தால் வசதிபடைத்த ஏழைகள்தான் அதிகமாக இதனை அனுபவிக்கின்றனர்... இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலேயே அரசாங்கம் இத்திட்டத்தினை சட்டத்தின் வரையறைக்குள் முழுமையாக கொண்டுவர முனைந்து பல தகவல்கள் அடங்கிய விதிமுறைக்கோவை ஒன்றைத் தயாரித்து நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இது பல வழிகளில் சாதகமாக இருந்தாலும் சில அப்பாவி மக்களும் பாதிப்படைகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருந்து பொருத்தமான மக்களுக்கே இச் சமுர்த்திக் கொடுப்பனவுகளைக் கொடுக்கவேண்டும். இதில் பாரபட்சம் காட்டாது தமக்குத் தெரிந்தவர்கள், செல்வாக்குள்ளவர்கள் என்று பாராது ஏழைகளின் சொத்துக்களை அவர்களுக்கே சென்றடையுமாறு தமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது சாலச் சிறந்தது.

இன்னும் சிறிது நாட்களில் எமது ஊரில் யார் யாருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்ற தகவல்களையும் இந்த இணையத்தளத்தில் பதிவிட முனைகின்றேன்......(தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில்)

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்திக் கொடுப்பனவு சம்மந்தமாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அடங்கிய சட்டக்கோவை












நன்றி