Thursday 18 February 2016

வரலாற்றுத் தலைவன்

வரலாறு சொல்லாத உண்மைகள் ஏறாளம்... அதற்குக் காரணம் அரசியலதிகாரம் படைத்தவர்கள் வரலாற்றை மாற்ற நினைப்பதுதான். ஆனால் அதிகாரத்தாலும், வஞ்சனையாலும், வாய்ப்பிதற்றலினாலும் மாற்ற முடியாதளவிற்கு வரலாறு படைத்தவர்தான் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் என்பதை யாரும் மறுக்கமுடியாது! பணத்தையும், பதவியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு அரசியல் சூழ்ச்சி செய்து அரியாசனை ஏறத் துடிக்கின்ற இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியிலே இவரின் சேவையை ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு இன்று எமது சமூகத்தில் அரசியல்வாதிகள் இல்லை என்பதே யதார்த்தம். 

தூரநோக்கும், கலைரசனையும், கல்விஞானமும் கொண்டு அக்கரைப்பற்று மண்ணிலே முத்தாக ஜொலித்த மக்களின் சொத்தை முற்றத்து மல்லிகை மணக்காது என்பதுபோல அம்மக்களே இன்று தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக கையேந்தி நிற்கின்றனர்(இவரின் சேவைகளை நான் சொல்லவேண்டிய அவசியமில்லை). இது எமக்கு நாமே செய்துகொண்ட வரலாற்றுத் துரோகம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும். எதிர்காலம் நம்மை பழிக்கும். அந்நாளில் நாம் எட்டப்பர்களாகவே அவர்களுக்குக் காட்சிளிப்போம் என்பதில் சந்தேகமில்லை.

தன்னோடு பயணிக்கும் நண்பன் விழுகின்றபோது தாங்கிக்கொள்பவன்தான் உண்மையான தோழன். நண்பன் விழுகின்றபோது அவனை விட்டுவிட்டு இன்னொருவரின் முதுகிலே ஏறிக்கொள்கின்ற வஞ்சக நெஞ்சம்படைத்த அரசியல்வாதிகளிடையே தான் தோற்றாலும் நம்பியவரை கைவிடக்கூடாது என்ற செஞ்சோற்றுக் கடன் கழித்த நவீன கர்ணன் அதாஉல்லா என்றால் அது மிகையாகாது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் சேவையின் வெளிப்பாடுகள் மாகாணசபை உறுப்பினர் திரு. உதுமாலெப்பையின் மூலமாக எமது ஊரிலும் வெளிப்பட்டிருப்பதை  அனைவரும் அறிவோம். மக்கள் இவர்களை மறந்தாலும் எமது மண் இருக்கின்ற காலமெல்லாம் மறையாது இவர்களின் புகழ்!

“உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்” என்ற கண்ணதாசனின் பொன்னான வரிகள் இவர்களுக்கும் பொருந்தும். அரசியல் அதிகாரம் இருக்கின்றபோது இவர்களோடு ஒட்டியிருந்து அரசியல் இலாபமடைந்தவர்கள் அதிகாரம் இல்லை என்று தெரிந்தபின் பழுத்த இலைகளாக உதிர்ந்துவிட்டனர். ஆபத்தில் உதவுபவன்தான் உண்மையான நண்பன் அதனை மஹிந்தவுக்கா அதாவுல்லாஹ்வும், அதாவுல்லாஹ்வுக்காக உதுமாலெப்பையும் காண்பித்திருக்கின்றனர். ஆனால் நமது மக்கள்????

இன்று எமது சமூகத்திற்காக இருக்கின்ற அரசியல்வாதிகளை சிந்தித்துப் பாருங்கள்! அவர்களிடையே அதிகார வெறி மட்டுமே எஞ்சியிருக்கின்றது. அரசியலதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்கல்களைத் தவிற மக்களுக்கு என்னசேவைகள் செய்திருக்கின்றார்கள்?? இன்று கட்சிகளுக்காகவே மக்கள் வாழ்கின்றனர். ஆனால் மக்களுக்காக கட்சிகள் என்ன செய்திருக்கின்றது!? போராளிகள் போராளிகளாகவே இருக்கின்றனர் ஆனால் சுகபோகங்களையும், சலுகைகளையும் அட்டைபோல் ஒட்டியிருக்கின்ற சில சுயநலவாதிகளே அனுபவிக்கின்றனர். மக்களின் பிரதிநிதிகள் இருந்தும் அரசியலில் எமது மக்கள் இன்னும் அநாதைகளாகவே புறக்கணிக்கப்படுகின்றனர். எத்தனை நல்லாட்சி மாறியும் மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் இல்லை என்றால் அவ்வாட்சி எவ்வாறு நல்லாட்சியாகும்!!?? அத்தனையும் கானல் நீராகவே காண்கின்றேன்!

அரசில்வாதிகள் மேடை மேடையாக ஏறி தமது வாக்குப் பெட்டிகளை நிறப்புவதற்காக தொண்டைத் தண்ணீர் வற்றுமளவிற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர் பாவம் எம் மக்கள் படித்திருந்தும், அனுபவமிருந்தும், துணிவிருந்தும், மாற்றத்திற்கான பலமிருந்தும் அவர்களின் வாக்குறுதிகளை நம்பி நம்பியே ஏமாந்துவிடுகின்றனர். இதுவே காலாகாலம் அரங்கேருகின்ற கண்துடைப்பு நாடகமன்றோ......ஆனால், வாக்குறுதிகளுக்கு மேலாகவே பல்வேறு சேவைகளை அழகியமுறையில் செய்துகாட்டியவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்கள். இன்றிருக்கின்ற அமைச்சர்களோடு இவரை ஒப்பிட்டுப்பாருங்கள் உண்மைகளை உங்களின் சிந்தைகள் உணரும்.

-நன்றி-

Monday 1 February 2016

67 சுதந்திர தினங்கள் முடிந்தும் உறுதிப்படுத்தப்படாத சுதந்திரம்!


எதிர்வருகின்ற 2016.02.04 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில்(பெரும்பாலும்) இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடவிருக்கின்ற இவ்வேளையில் இதுவரை காலமும் பல்வேறு இனத்தவர்களைக் கொண்ட எமது இலங்கை மக்களிடையே உண்மையான சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளதா என்பதே இன்றைய கேள்விக்குறியாக இருந்துவருகின்றது.

பல்லின மக்கள் வாழ்கின்ற நமது இலங்கைத் தீவிலே ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தாமலும் நாட்டில் எந்தவொரு இடத்திலேயும் எந்நேரத்திலும் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் அரசியல் தலையீடுகளின்றியும் தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவகையிலும் ஆட்சியும் அதிகாரமும் அனைவருக்கும் சமமாகவும், சட்டமும் ஒழுங்கும் பொதுவானதாகவும், சலுகைகள் அனைத்தினத்தவருக்கும் சமமானதாகவும் வழங்கப்படுகின்றபோதுதான் அங்கே மக்களின் உண்மையான சுதந்திரம் உறுதிசெய்யப்படுகின்றது.

2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக்கொண்ட எமது தாய்த்தேசத்தில் 133வருட வெள்ளையர்களின் பிடியிலிருந்து விடுபட்டு 1948ல் சுதந்திரம் என்ற பெயர் பெற்று 1972ல் குடியரசான எமது தாய்நாட்டில் 1983 கறுப்பு ஜுலையுடன் ஆரம்பமாகிய  இன அடக்குமுறைக்கு எதிராக உருவான ஆயுதப்போராட்டம்  30வருடங்களின் பின்னர் ஸ்த்தம்பிதம் அடைந்தமையும் அதன் பின்னர் மக்கள் பகிரங்கமான அரசியல் அடக்குமுறைக்கு உள்வாங்கப்பட்டு பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகின்றமையையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

1948 முதல் கடந்த 2015 பெப்ரவரி 4ஆம் திகதி வரை நடைபெற்றிருந்த 67 சுதந்திரதின நிகழ்வுகளும் இலங்கை, வெள்ளையர்களிடமிருந்து விடுபட்ட நாளினையே நினைவு கூறுகின்ற ஒரு தினமாகவே அமைந்திருக்கின்றதே தவிற அவை மக்களுக்கான உண்மையான சுதந்திரத்தை வெளிப்படுத்திய தினமல்ல என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அத்தோடு, யுத்தவெற்றியின் பின்னரே சிறுபான்மையினர் அரசியல்ரீதியாக அதிகமான அடக்குமுறைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதுடன், காணிகளும், உடமைகளும் சுவீகரிக்கப்பட்டமையும் அவ்வடக்குமுறைகளில் இலங்கையரசு நேரடியாகத் தொடர்புபடாமல் வேறு சில அமைப்புக்களின் மூலமாகவே செயற்பட்டதையும் அறியாமலில்லை.

கடந்தகால ஆட்சியில், இலங்கையின் சட்டமும் ஒழுங்கும் அதிகமாகப் பிரையோகிக்கப்பட்டது சிறுபான்மையினர் மீதுதான் என்பதுடன் தெளிவான ஆதாரங்களுடன் பகிரங்கமாக வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் அரசின் சலுகைகளை நன்கு அனுபவித்துக்கொண்டனர் என்பதே யதார்த்தம். வெவ்வேறு துறைகளில் படித்துப்பட்டம் பெற்ற எத்தனையோ பட்டதாரிகள் இருக்கும்போது திறமைகள் புறந்தள்ளப்பட்டு அரசியலதிகாரமும், பணப்புலக்கமும் கொண்ட அறிவு, திறன், மனப்பாங்கில் தகுதியற்றவர்களே இன்று அதிகமான வேலைத்தளங்களில் நுழைந்து கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தி சீரழித்துச் செல்கின்றனர்.

எதிர்வருகின்ற 68வது சுதந்திரதினமாவது தனிமனித பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு எம் தேசமக்களின் வாழ்விற்கான விடியலை ஏற்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மக்களுக்கான 1வது சுதந்திர தினமாகவும்,  அரசியல் தலையீடுகளற்று திறமைகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற வகையிலும், கல்வி, விளையாட்டு, மருத்துவம் போன்ற அனைத்துத்துறைகளிலும் திறமையுள்ள மக்கள் சுதந்திரமாகப் பங்குப்பற்றக்கூடிய வகையிலும், இன வன்முறைகளைத் தோற்றுவிக்காமலும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்களுக்குப் பங்கம் ஏற்படாததாகவும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கொண்டதாகவும் அமையவேண்டுமென்பதே எமது அவா.

-நன்றி-